

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் குளிச்சியான தட்பவெப்பம் நிலவி வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளுக்கு விநாடிக்கு 500 கனஅடிக்கு மேல் தண்ணீர் உள்வரத்தாக செல்கிறது.
கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கடந்த இரு வாரமாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
இன்று பகல் 12 மணியளவில் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக சிற்றாறு ஒன்றில் 38 மிமீ., மழை பெய்திருந்தது.
முள்ளங்கினாவிளையில் 35 மிமீ., சிவலோகத்தில் 26 மிமீ., பேச்சிப்பாறையில் 12, பெருஞ்சாணி, புத்தன் அணையில் தலா 10 மிமீ., மழை பதிவானது.
தொடர் மழையால் மலையோர பகுதிகளில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. விநாடிக்கு 500 கனஅடிக்கு மேல் அணைகளுக்கு தண்ணீர் வந்த வண்ணம் உள்ளன.
பேச்சிப்பாறை அணைக்கு 218 கனஅடியும், பெருஞ்சாணிக்கு 116, சிற்றாறு ஒன்றிற்கு 67, சிற்றாறு இரண்டிற்கு 108 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 41.60 அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து 123 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.
பெருஞ்சாணி அணையில் 55 அடியும், பொய்கையில் 16.80 அடி, மாம்பழத்துறையாறில் 19 அடி, சிற்றாறு ஒன்றில் 7.60 அடி, சிற்றாறு இரண்டில் 7.71 அடி தண்ணீர் உள்ளது. மழை தொடர்வதால் அணைகளின் நீர்மட்டம் மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.