

தனக்கு கடும் காய்ச்சல் இருப்பது அறிந்தும் வேறு வழியில்லாமல் 2 நாள் வாக்கு எண்ணிக்கைக்காக பணி செய்த உதவி ஆணையர் மறுநாள் 50% நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது கடமையுணர்வு குறித்து சக போலீஸார் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றனர்.
சென்னை, பல்லாவரம் போலீஸ் உதவி ஆணையராகப் பணியாற்றியவர் ஈஸ்வரன் (52). இவர், வியாசர்பாடி, கொடுங்கையூர் காவல் நிலையங்களில், ஆய்வாளராகவும் பணியாற்றியுள்ளார். வேப்பேரி காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிய ஈஸ்வரன் தேர்தல் நேரத்தில் பல்லாவரம் உதவி ஆணையராக மாற்றப்பட்டார். தொடர்ந்து தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார்.
தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் சென்னையில் கரோனா தொற்று அதிகரித்தது. இதில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதில் கடந்த மே 1 ஆம் தேதி உதவி ஆணையர் ஈஸ்வரனுக்கும் கடும் காய்ச்சல் ஏற்பட்டது. 102 டிகிரி காய்ச்சலுடன் பணிக்கு வந்த அவர் கரோனா பரிசோதனை செய்ய முடிவெடுத்துள்ளார்.
ஆனால் மறுநாள் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்புப் பணி காரணமாக முக்கிய அதிகாரியான தாம் விடுப்பு எடுத்தால் மேலதிகாரிகள் ஏதாவது சொல்வார்கள் என்று மருத்துவமனை செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து கடும் காய்ச்சலுடன் அடுத்த 2 நாட்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்ட அவர் மே.3 ஆம் தேதி கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் கரோனா பரிசோதனை செய்து கொண்டார். நெகட்டிவ் என இருந்தது. மறுநாள் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் நுரையீரலில் மிகுந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. கரோனா தொற்று பாதிப்பு காரணமாக கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அவர், மூச்சு திணறல் காரணமாக இன்று சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணி நேரமாக இல்லாமல் இருந்திருந்தால் மூன்று நாட்களுக்கு முன்னரே சிகிச்சைக்கு சென்றிருக்க வாய்ப்புண்டு, அவர் சிகிச்சையில் உடல் நலன் தேறி இருக்கலாம் என போலீஸார் தெரிவிகின்றனர்.
உயிரிழந்த ஈஸ்வரனுக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கொளத்தூரில் வசித்து வந்தார். காவல் பணியில் உதவி ஆணையர் உயிரிழந்தது போலீஸார் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் இதுவரை தமிழகத்தில் 3,070 காவல்துறையினர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை 1,722 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ள நிலையில், 1,388 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு கரோனா தொற்றின் தாக்கம் துவங்கியது முதல் தற்போது வரை 70 காவல் துறையினர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் மட்டும் 23 போலீஸார் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் 4496 போலீஸார் கரோனாவல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3600 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 700 பேர் சிகிச்சையில் உள்ளனர்.