

கரோனா தொற்றின் அறிகுறிகளை அலட்சியப்படுத்துபவர்கள் ஆக்சிஜன் குறையும் நிலைக்கு தள்ளப்படுவதாக, கோவை அரசு மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சைப் பிரிவு தலைவர் எஸ்.கீர்த்திவாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
"ஆர்.டி - பி.சி.ஆர் பரிசோதனையில், 100 சதவீதம் தொற்றை உறுதி செய்ய முடியாது. அதிகபட்சம் 70 சதவீதம் வரை தொற்று இருப்பதை உறுதி செய்யலாம். மூக்கு, தொண்டையில் முதலில் இருக்கும் தொற்று, பின்னர் நுரையீரலை பாதிக்கிறது. எனவே, நாளடைவில் மூக்கு, தொண்டையில் மாதிரியை எடுத்து பரிசோதித்தால் முடிவு சரியாக இருக்காது. காய்ச்சல், தாங்கமுடியாத உடல்வலி, சுவை, வாசனை தெரியாமல் இருப்பது, வயிற்றுப்போக்கு, தலைவலி ஆகியவை இருந்தால் அவர்களுக்கு தொற்று இருக்கும் வாய்ப்பு அதிகம்.
மேலும், காய்ச்சல் வந்து முதல்நாள் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்தால் அதில் ஒன்றும் தெரியாது. எனவே, முதலில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதில் தொற்று உறுதிசெய்யப்பட்டால் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பரிசோதனையில் 'நெகட்டிவ்' என வந்து, இருமல், மூச்சுத்திணறல் தொடர்ந்து இருந்தால், 4 அல்லது 5-வது நாளில் மருத்துவரின் ஆலோசனை பெற்று சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
கரோனா இரண்டாம் அலையில் அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்கள் குறைவாகவே உள்ளனர். ஏதேனும் ஒரு அறிகுறியாவது இருக்கும். எனவே, அறிகுறிகளை அலட்சியப்படுத்தக்கூடாது. அவ்வாறு அலட்சியப்படுத்துபவர்கள் ஆக்சிஜன் குறையும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இரண்டாம் அலையில் நுரையீரல் பாதிப்பும் அதிகமாக உள்ளது. கடந்தமுறையைவிட இந்த முறை 20 முதல் 40 வயதுடைய இளம் வயதினரும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
இந்த அலையில் காய்ச்சல் வந்தால், அவர்கள் எல்லோருமே ஒரு வாரத்துக்கு வெளியில் சுற்றாமல் கவனமாக இருக்க வேண்டும். பலர் மருந்துக் கடைகளில் சுயமாக மாத்திரைகளை வாங்கி உட்கொள்கின்றனர். அவ்வாறு செய்யக்கூடாது.
பல்ஸ் ஆக்சிமீட்டரின் அவசியம்
எல்லோருமே பல்ஸ் ஆக்சிமீட்டரை வைத்துக்கொள்ள முடியாது. ஆனால், இதுபோன்ற பெருந்தொற்று காலத்தில் வீட்டில் ஒரு பல்ஸ் ஆக்சிமீட்டர் இருந்தால் நல்லது.
கரோனா அறிகுறிகள் உள்ளவர்கள், தொற்று உறுதியாகி வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்பவர்கள் பல்ஸ் ஆக்சிமீட்டரை பயன்படுத்தி ஆக்சிஜன் அளவை தினமும் கண்காணித்துக்கொள்ளலாம்.
ஆள்காட்டி விரலை பல்ஸ் ஆக்சிமீட்டரில் வைத்தால், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு (SpO2) தெரியவரும். இந்த அளவானது சராசரியாக 96 முதல் 100 வரை இருக்க வேண்டும். 95-க்குக் கீழ் இருந்தால் மருத்துவரின் உதவியை நாட வேண்டும். 94-க்குக் கீழ் இருந்தால் செயற்கை ஆக்சிஜன் அளிக்க வேண்டும்".
இவ்வாறு அவர் கூறினார்.