Published : 13 May 2021 06:40 PM
Last Updated : 13 May 2021 06:40 PM

சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த 256 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள்: ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுப்பிவைப்பு

சென்னை

சிங்கப்பூரிலிருந்து 2 இந்திய விமானப்படை விமானங்களில் 256 காலி ஆக்சிஜன் சிலிண்டா்கள், கண்டெய்னர்கள் சென்னை விமானநிலையம் வந்தன. தமிழக அரசு அதிகாரிகள் அதை பெற்றுக்கொண்டு லாரிகள் மூலம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுப்பி வைத்தனர்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் காரணமாக தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை வேகமாகப் பரவிவருவதால் நோயுற்று தனிமையில் இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் தவிக்கும் நிலை உள்ளது. ஆக்சிஜன் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு குறையை போக்க உலக நாடுகள் உதவி வருகின்றன.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கினாலும் அதை கொண்டு சென்று சேர்க்க சிலிண்டர்கள் தேவை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்ஜிஸனை சேமித்து வைக்க போதிய சிலிண்டா்கள், கண்டெய்னர்கள் இல்லை.

இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெர்மன், பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து 900 காலி சிலிண்டர்கள், மற்றும் காலி கண்டெய்னர்கள் 2 இந்திய விமானப்படை விமானங்களில் சென்னை வந்தன.

அவை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குடோனில் வைக்கப்பட்டு, ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில் தமிழகத்திற்கு மேலும் கூடுதல் காலி சிலிண்டர்கள், காலி கண்டெய்னர்கள் தேவைப்பட்டன. அத்தோடு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் ஆக்சிஜன் தயாரிக்க தற்காலிகமாக 4 மாதங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அங்கு உற்பத்தியாகும் ஆக்சிஜனை சேகரித்து வைக்க போதிய சிலிண்டர்கள், கண்டெய்னர்கள் இல்லை. இதையடுத்து தமிழக அரசு சிங்கப்பூர் அரசிடம் காலி சிலிண்டர்கள், காலி கண்டெய்னர்களை கேட்டது. காலி கண்டெய்னர்கள், சிலிண்டர்களை அனுப்ப சிங்கப்பூர் அரசும் சம்மதம் தெரிவித்தது.

இதையடுத்து சிங்கப்பூரிலிருந்து 128 காலி சிலிண்டர்கள் மற்றும் காலி கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு, இந்திய விமானப்படையின் முதல் விமானம் நேற்று இரவு 10 மணிக்கு சென்னை பழைய விமானநிலையம் வந்து சேர்ந்தது.

இதையடுத்து மேலும் 128 காலி சிலிண்டர்களுடன் மற்றொரு இந்திய விமானப்படை விமானம் சிங்கப்பூரிலிருந்து இன்று அதிகாலை 2 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்தது.

சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறையினர் சோதனைகள் முடிந்ததும், தமிழக அரசு அதிகாரிகளிடம் 256 காலி சிலிண்டர்கள், கண்டெய்னர்கள் ஒப்படைக்கப்பட்டன. அதன்பின்பு அதிகாரிகள் அந்த காலி சிலிண்டர்கள், கண்டெய்னர்களை லாரிகள் மூலம் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைப்போல் இன்று இரவும் மேலும் 2 இந்திய விமானப்படை விமானங்களில் சிங்கப்பூரிலிருந்து காலி சிலிண்டர்கள் சென்னைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x