

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து டேங்கர் லாரியில் கொண்டுவரப்பட்ட திரவ ஆக்சிஜன் இன்று திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொள்கலன்களில் நிரப்பி இருப்பு வைக்கப்பட்டது.
திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு 1240 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 800 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி இருக்கிறது.
இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைக்காக 13 ஆயிரம் கிலோ லிட்டர், 6 ஆயிரம் கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 திரவ ஆக்சிஜன் சேமிப்பு கொள்கலன்கள் உள்ளன.
தமிழ்நாடு மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் மூலம் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், மகேந்திரகிரியிலுள்ள ஐஎஸ்ஆர்ஓ திரவ இயக்க உந்தும வளாகத்திலிருந்தும் ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டு நிரப்பி வைக்கப்படுகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து டேங்கர் லாரியில் கொண்டுவரப்பட்ட திரவ ஆக்சிஜன் இன்று இந்த கொள்கலன்களில் நிரப்பி இருப்பு வைக்கப்பட்டது.
தேவைக்கேற்ப இந்த ஆக்சிஜன் பயன்படுத்தப்படும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.