

வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் வசதியுடன் உள்ள படுக்கைகள் இல்லாமல் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று ஏற்பட்டவர்களின் முடிவுகள் முன்தினம் இரவு தொகுக்கப்பட்டு அடுத்த நாள் காலையில் வெளியிடப்படுகிறது.
அன்றைய தினம் தொற்று பாதித்தவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வருகின்றனர். இதில், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்களில் வரும் நோயாளிகள் பலர், அவசர சிகிச்சைப் பிரிவின் முன்பாக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது.
மூச்சுத்திணறல் பாதிப்பு அதிகம் இருக்கும் நோயாளிகள் சிலர், ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டுகள் முழுமையாக நிரம்பியுள்ள நிலையில் புதிய நோயாளிகள் வருகையால் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு நோயாளியையும் பரிசோதித்த பிறகே வார்டுகளுக்கு அனுமதிக்க வேண்டும் என்பதாலும் நோயாளிகள் காத்திருக்க வேண்டியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் அனைத்து தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் கரோனா வார்டுகளும் நிரம்பி இருப்பதால் படுக்கை வசதிக்காக நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் அல்லல்படுகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் தற்போது வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,764 பேராக உள்ளது. இவர்களில் 28,657 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 3,933 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 454 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 4,302 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 36 பேர் இறந்துள்ளனர்.
நிரம்பிய ஆக்சிஜன் படுக்கைகள்
வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களில் சுமார் 30 சதவீதம் பேருக்கு ஆக்சிஜன் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆக்சிஜன் படுக்கை சதிகளுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சாதாரணப் படுக்கைகளில் எண்ணிக்கை 1753 ஆகவும், ஆக்சிஜன் வசதி படுக்கைகள் 595 ஆகவும், ஐசியு படுக்கைகள் 145 ஆகவும் உள்ளன.
தனியார் மருத்துவமனைகளில் சாதாரண படுக்கைகள் 1799 ஆகவும், ஆக்சிஜன் வசதி 1140 ஆகவும், ஐசியு படுக்கைகள் 154 ஆகவும் உள்ளன. இதில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஐசியு படுக்கைகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மாவட்டத்தில் சுமார் 2,233 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சைக்காகப் புதிதாக வரும் நோயாளிகளுக்குப் படுக்கைகள் கிடைக்காத நிலை இருக்கிறது.
இரண்டு வாரங்கள் கெடு
வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு ஜூன் இரண்டாவது வாரத்தில் தினசரி 2 ஆயிரம் பேராக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கு ஏற்ப இம்மாத இறுதிக்குள் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளையும் ஆக்ஸிஜன் விநியோகக் கட்டமைப்பையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போதுள்ள ஆக்சிஜன் படுக்கைகள் அனைத்தும் நிரம்பிய நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்திற்கு எதிரில் தற்காலிக அரங்கு ஏற்படுத்தி அங்கு ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் சுமார் 20 படுக்கை வசதிகளை ஏற்படுத்த உள்ளனர். இதுதவிர 34 ஐசியு படுக்கைகள் வசதியை வரும் 14-ஆம் தேதிக்குள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர உள்ளனர்.
அதேபோல், பிற வார்டுகளில் வரும் 16-ஆம் தேதிக்குள் புதிதாக140 ஆக்ஸிஜன் படுக்கைகளை ஏற்படுத்த உள்ளனர். இது தவிர சீமாங் கட்டிடத்தில் அடுத்த 15 நாட்களுக்குள் கூடுலாக 90 ஆக்ஸிஜன் படுக்கைகளை அமைக்க உள்ளனர்.
மேலும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கூடுதலாக 50 படுக்கைகள், பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் 37 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டதாக அடுத்த ஒரு வாரத்தில் தயார் செய்ய உள்ளனர். புதிய ஏற்பாடுகள் மூலம் அடுத்து வரும் நாட்களில் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்