பாளை சிறையில் கொலையான கைதி குடும்பத்துக்கு ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு: விசாரணை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைப்பு

பாளை சிறையில் கொலையான கைதி குடும்பத்துக்கு ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு: விசாரணை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைப்பு
Updated on
1 min read

பாளையங்கோட்டை சிறையில் கொலை செய்யப்பட்ட கைதியின் குடும்பத்துக்கு ரூ.2 கோடி இழப்பீடு மற்றும் நீதி விசாரணை கோரி தாக்கலான மனு மீதான விசாரணை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் வாகைக்குளத்தைச் சேர்ந்த ஏ.பாவநாசம், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

என் மகன் முத்து மனோ (27). நாங்குநேரி தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவராக இருந்தார். அவர் மீது 6-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. களக்காடு போலீஸார் என் மகனை கைது செய்து ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் அடைத்தனர். ஏப். 22-ல் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அன்று மதியம் சக கைதிகளால் சிறைக்குள்ளே கொலை செய்யப்பட்டார்.

என் மகன் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பாளை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு மணி நேரத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிறையில் கலவரம் நடைபெற்று அதில் கொலை நிகழ்ந்ததாக சிறைத்துறையினர் சித்தரித்துள்ளனர். அதே நேரத்தில் என் மகனுடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிற கைதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தற்போது என் மகன் கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். என் மகன் கொலையில் சிறை உயர் அதிகாரிகள், காவலர்களுக்கு தொடர்பு உள்ளது.

இதனால் ரூ.2 கோடி இழப்பீடு மற்றும் பாளை சிறை உயர் அதிகாரிகளை கொலை வழக்கில் சேர்க்கவும், உயர் நீதிமன்றத்தில் பணியிலுள்ள நீதிபதியை கொண்டு நீதி விசாரணை நடத்தவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.கிருஷ்ணவள்ளி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசுத் தரப்பில், கொலையானவர் குடும்பத்துக்கு இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் தமிழக தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 6 சிறை ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மனுதாரர் மகன் கொலை தொடர்பாக உயர் நீதிமன்றக் கிளையில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்துள்ளார். கொலை செய்யப்பட்ட முத்து மனோவின் உடலை அவரது பெற்றோர்கள் இதுவரை வாங்காமல் உள்ளனர்.

மே 1-க்குள் உடலை வாங்கி இறுதி சடங்குகளை முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகும் உடலை வாங்காமல் உள்ளனர் என்றார். இதையடுத்து, விசாரணையை ஜூன் மாதத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in