Last Updated : 13 May, 2021 04:52 PM

 

Published : 13 May 2021 04:52 PM
Last Updated : 13 May 2021 04:52 PM

கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம்; திருச்சியில் ரெம்டெசிவிர் விற்பனையை முறைப்படுத்த வலியுறுத்தல்

மருந்து கிடைக்காததால் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதிருப்தியைத் தெரிவித்த பொதுமக்களில் ஒரு பகுதியினர்.

திருச்சி

கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால் திருச்சியில் ரெம்டெசிவிர் விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்குத் தேவைப்படும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை, திருச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெரிய மிளகுபாறையில் உள்ள அரசு இயன்முறை சிகிச்சைக் கல்லூரி வளாகத்தில் மே 8-ம் தேதி தொடங்கியது.

இதுகுறித்த அறிவிப்பு அப்போது பரவல் ஆகாததால், மே 8-ம் தேதி 30 பேர் மட்டுமே ரெம்டெசிவிர் மருந்தை வாங்கிச் சென்றனர்.

மறுநாளான ஞாயிறன்று (மே 9-ம் தேதி) ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படவில்லை. ஆனால், திருச்சியில் ரெம்டெசிவிர் விற்பனை செய்வது தெரிய வந்ததையடுத்து, மருந்து வாங்குவதற்காக மே 9-ம் தேதி 100-க்கும் அதிகமானோர் வந்துவிட்டனர். ஞாயிறு என்பதால் மருந்து விற்பனை இல்லை என்று கூறியும் யாரும் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. போலீஸார் தொடர் முயற்சியால் பிற்பகலுக்குப் பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

தொடர்ந்து, மே 10, 11, 12 ஆகிய 3 நாட்களும் தினமும் 50 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தினமும் 200-க்கும் அதிகமானோர் மருந்து வாங்க வரும் நிலையில், 50 பேருக்கு மட்டுமே வழங்குவதால், மருந்து கிடைக்காதவர்கள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது கடந்த 4 நாட்களாகத் தொடர்கிறது.

இதனால், ரெம்டெசிவிர் விற்பனை மையம் மற்றும் அந்தச் சாலையில் ஏராளமானோ போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, மருந்து வாங்க வருவோரில் பலரும் முந்தைய நாள் மாலையே வந்து காத்திருப்பதும் வழக்கமாகி வருகிறது.

இந்த நிலையில், இன்றும் 200-க்கும் அதிகமானோர் ரெம்டெசிவிர் மருந்து வாங்கக் காத்திருந்த நிலையில், 50 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டது. இதனால், டோக்கன் கிடைக்காதவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை ஆன்-லைனில் முன்பதிவின்படி வழங்க வேண்டும். இல்லையெனில், மருந்து வாங்க வரும் அனைவருக்கும், தேதி வாரியாக டோக்கன் கொடுத்து, அதன்படி மருந்தை விற்பனை செய்ய வேண்டும். இதன்மூலம் இங்கு வந்து பல மணி நேரம் காத்திருந்தும், மருந்து கிடைக்காமல் நாங்கள் ஏமாற்றம் அடைவதும், அலைக்கழிக்கப்படுவதும் தவிர்க்கப்படும். தினமும் 100 பேருக்கு ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “ரெம்டெசிவிர் மருந்து விற்பனை முறையை முறைப்படுத்துமாறு ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை மேற்பார்வையிடும் வருவாய்த் துறையினரிடம் பலமுறை எடுத்துக் கூறியும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தினமும் இங்கு வந்துதான் டோக்கன் கொடுக்கின்றனர். இதனால், நூற்றுக்கணக்கானோர் தினமும் வந்து பல மணி நேரம் வெயிலில் வாடுவதுடன், தினமும் அலைக்கழிக்கப்படுகின்றனர். மேலும், மருந்து கிடைக்காத விரக்தியில் தினமும் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். ரெம்டெசிவிர் மருந்து வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க மறப்பதால், கரோனா பரவல் அச்சம் உள்ளது" என்றனர்.

இதனிடையே, ரம்ஜானை ஒட்டி நாளை ரெம்டெசிவிர் விற்பனை கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. இதனால், மருந்து கிடைக்காத மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தங்களுக்கு ஒரு மருந்தாவது தர வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து, மேலும் 50 பேருக்கு இன்றே ரெம்டெசிவிர் மருந்து வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்தார். முதல் 50 பேர் வரிசையில் நிற்குமாறும், அதற்கு மேல் உள்ளவர்கள் கலைந்து சென்றுவிடுமாறும் அவர் கூறினார். இதையடுத்து, ஏற்கெனவே 50 பேருடன், இந்த 50 பேரையும் சேர்த்து மொத்தம் 100 பேருக்கு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டது. திருச்சியில் நாளை (மே 14) ரெம்டெசிவிர் மருந்து விற்பனை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x