Last Updated : 13 May, 2021 03:37 PM

 

Published : 13 May 2021 03:37 PM
Last Updated : 13 May 2021 03:37 PM

கரோனா பேரிடரில் உயிர்களைக் காக்கும் பணியில் நேரடியாக உதவுவதில் பெருமை: ஸ்டெர்லைட் நிர்வாகம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 4.8 டன் திரவ ஆக்சிஜனோடு புறப்பட்ட முதலாவது டேங்கர் லாரியை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் கொடியசைத்து அனுப்பி வைத்தார். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் 98.6 சதவீதம் தூய்மையானது என தூத்துக்குடி ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேவேளையில், கரோனா பேரிடரில் ஆக்சிஜன் தயாரித்து உயிர்களைக் காப்பதில் நேரடியாக உதவுவதில் பெருமைப்படுவதாக ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியுள்ளது. இங்கிருந்து 4.8 டன் எடையுள்ள திரவ ஆக்சிஜனை ஏற்றிக் கொண்டு முதல் டேங்கர் லாரி இன்று காலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புறப்பட்டுச் சென்றது.

இது குறித்து ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பரிட்சார்த்த முறையில் ஸ்டெர்லைட் ஆலையில் தயார் செய்யப்பட்ட 4.8 டன் திரவ ஆக்சிஜன் முதல் கட்டமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு நாளொன்றுக்கு 5 முதல் 10 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும். பின்னர் இந்த அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு முழு கொள்ளளவான 35 மெட்ரிக் டன் ஆக்சிஜனையும் தயார் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தற்போது தயார் செய்து அனுப்பப்பட்டுள்ள ஆக்சிஜன் ஆய்வக பரிசோதனையில் 98.6 சதவீதம் தூய்மையானது என உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றார்.

ஸ்டெர்லைட் நன்றி:

முன்னதாக ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், "நெருக்கடியான இந்த நேரத்தில் எங்கள் ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். தற்போது தினமும் 2 டேங்கர் லாரிகள் மூலம் திரவ ஆக்சிஜனை சப்ளை செய்யவுள்ளோம். ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்கும் போது சப்ளை செய்யப்படும் டேங்கர் லாரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். நாங்கள் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் 98.6 சதவீதம் தூய்மையானது.

ஆக்சிஜனை நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அமைப்புகளோடு இணைந்து மேற்கொண்டு வருகிறோம். ஆக்சிஜன் உற்பத்திக்கு தேவையான அனுமதிகளை விரைவாக வழங்கிய உச்சநீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைவரது கூட்டு முயற்சியால் தான் ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை செயல் அதிகாரி உறுதி:

ஸ்டெர்லைட் நிறுவன தலைமை செயல் அதிகாரி பங்கஜ் குமார் கூறும்போது, "நெருக்கடியான இந்த நேரத்தில் உயிர்களைக் காப்பாற்ற எங்கள் ஆலையில் உள்ள வசதிகள் நேரடியாக உதவுகின்றதை நினைத்து பெருமை கொள்கிறோம். எங்கள் ஆலையில் தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்தியை தடையின்றி மேற்கொள்ள அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் என உறுதியளிக்கிறேன்" என்றார் அவர்

உச்ச நீதிமன்றம் தீர்ப்பும் ஸ்டெர்லைட் திறப்பும்:

நாடு முழுவதும் கரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவதால் மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 27-ம் தேதி தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மட்டும் திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு கடந்த மாதம் 29--ம் தேதி அரசாணை வெளியிட்டது. மேலும், உச்ச நீதிமன்ற வழிக்காட்டுதலின் பேரில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவையும் தமிழக அரசு அமைத்தது. அத்தோடு ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மீண்டும் இயக்க தேவையான அனைத்து அனுமதிகளையும் அரசு வழங்கியது.

கண்காணிப்புக் குழு ஆய்வு:

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமையிலான கண்காணிப்புக் குழுவினர் ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் இம்மாதம் 5-ம் தேதி நேரில் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து அன்றைய தினமே ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2 நாட்களில் குடிநீர் இணைப்பும் வழங்கப்பட்டது. மேலும், ஆக்சிஜன் உற்பத்தி பணிகளை தொடங்க ஸ்டெர்லைட் நிறுவன பணியாளர்கள் உள்ளே செல்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை தமிழக அரசு 2018 மே 28-ம் தேதி மூடி சீல் வைத்தது. இதனை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டெர்லைட் ஆலை மூடியே கிடக்கிறது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதன் காரணமாக ஸ்டெர்லைட் ஆலையின் பிரதான நுழைவாயிலில் போடப்பட்ட சீல் அகற்றப்படவில்லை. மாறாக ஆலையிள் வடக்கு பக்கவாட்டில் உள்ள மற்றொரு கேட் வழியாக பணியாளர்கள் மற்றும் பொருட்கள் பலத்த சோதனைக்கு பிறகு ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. ஆட்சியர் தலைமையிலான கண்காணிப்புக் குழுவின் மேற்பார்வையில் இப்பணிகள் நடைபெற்றன.

ஆக்சிஜன் உற்பத்தியும் விநியோகமும்:

இந்தப் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்திக்கான சோதனை பணிகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்த சோதனை பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று இரவில் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் 98.6 சதவீதம் தூய்மையாக இருப்பதாக ஆய்வக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ஆக்சிஜனை தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு அனுப்பும் பணி இன்று காலை தொடங்கியது.

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட 4.8 டன் திரவ ஆக்சிஜனை ஏற்றிக் கொண்டு முதலாவது டேங்கர் லாரி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் இருந்து காலை 7.10 மணியளவில் கிளம்பியது. இந்த லாரியை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் ஆக்சிஜன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x