

புதுச்சேரியில் ரெம்டெசிவிர் தட்டுப்பாடு உள்ளது என்று நோயாளிகளின் குற்றச்சாட்டு அதிகரித்துள்ள சூழலில், 1400 மருந்துக் குப்பிகள் புதுச்சேரிக்கு வந்துள்ளதாகச் சுகாதாரத் துறைச் செயலர் டாக்டர் அருண் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அரசு அனுமதியுடன் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கரோனா தொற்றாளர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்துப் பற்றாக்குறை நிலவுவதாகப் பாதிக்கப்பட்டோர் குற்றம் சாட்டுகின்றனர்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சிகிச்சையில் இருப்போருக்கு ரெம்டெசிவிர் மருந்தை வெளியே வாங்கி வருமாறு எழுதித் தருவதாக நோயாளிகள் தரப்பில் குறிப்பிடுகின்றனர். ஆனால் வெளியில் ரெம்டெசிவிர் மருந்து இல்லை என்று கூறப்படுவதால் பாதிக்கப்பட்டதாக நோயாளிகள் தரப்பில் குறிப்பிட்டனர்.
இந்நிலையில் இதுபற்றி சுகாதாரத்துறைச் செயலர் டாக்டர் அருணிடம் இன்று கேட்டதற்கு, "புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்குத் தேவையான ரெம்டெசிவிர் ஊசி மருந்து மத்திய அரசால் 1400 வயல்கள் (குப்பிகள்) வழங்கப்பட்டுள்ளன.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக கரோனா நோய் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்குத் தேவையான ரெம்டெசிவிர் குப்பிகள் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல், தேவைக்கேற்ப தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் 1000 ரெம்டெசிவிர் குப்பிகள் வெள்ளிக்கிழமை (நாளை) வர உள்ளன" என்று தெரிவித்தார்.