Last Updated : 13 May, 2021 01:53 PM

 

Published : 13 May 2021 01:53 PM
Last Updated : 13 May 2021 01:53 PM

புதுச்சேரியில் குறுக்குவழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சி: அதிமுக, பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டாக குற்றச்சாட்டு

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயபால், பாஜக பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம்

புதுச்சேரி

மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ள மூன்று நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களின் நியமனத்தைப் பயன்படுத்தி, தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு ஏற்படுத்தி, குறுக்கு வழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சிக்கிறது என்று, அதிமுக, பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டாக குற்றம்சாட்டியுள்ளன.

புதுச்சேரியில் ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்று, கரோனா தொற்றால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இச்சூழலில், பாஜகவைச் சேர்ந்த மூவர் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, இக்கூட்டணிக்குள் அதிருப்தி ஏற்பட்டது. திமுக தரப்பும் ரங்கசாமியிடம் நெருக்கம் காட்டத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயபால், பாஜக பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம் எம்எல்ஏ ஆகியோர், கூட்டாக செய்தியாளர்களிடம் இன்று (மே 13) கூறியதாவது:

"புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரி மாநில நலன் மற்றும் வளர்ச்சி சம்பந்தமாக, மத்திய அரசுடன் ஒரு இணக்கமான அரசு அமைய வேண்டும் என்ற அடிப்படையில். என்.ஆர். காங்கிரஸ், அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வென்று தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்றுள்ளது.

தற்போது மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ள மூன்று நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களின் நியமனத்தைப் பயன்படுத்தி, தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு ஏற்படுத்தி குறுக்கு வழியில் ஆட்சியில் அமர திமுக முயற்சிக்கிறது.

நியமன சட்டப்பேரவை உறுப்பினர் நியமனத்தில் தவறு இருந்தால் அதை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய உரிமை, தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு மட்டுமே உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து, ஆட்சியை இழந்த திமுக கூட்டணி கட்சிகளுக்கு அந்த உரிமை இல்லை.

தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி, ஆட்சியில் அமர திமுகவினர் துடிக்கின்றனர். தேர்தலின்போது சகட்டுமேனிக்கு என்.ஆர்.காங். தலைவர் ரங்கசாமியை விமர்சனம் செய்த திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள், முதல்வராக பதவியேற்றுள்ள ரங்கசாமிக்கு அனுசரணையாக பேசுவது நாடகத்தனமாக உள்ளது. திமுகவின் பகல் கனவு என்றைக்கும் பலிக்காது".

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x