

மாணவர்கள் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு மக்களுக்கு பயனுள்ள புதிய தொழில் நுட்பங் களை கண்டுபிடிக்க வேண்டும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கேட்டுக் கொண்டுள்ளார்.
பள்ளி மாணவர்களிடையே அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ‘இன்ஸ்பயர்’ (inspire) விருது வழங்கப்பட்டு வருகிறது. 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தம் 40 ஆயிரம் மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளன. விருதுடன் அவர்களின் கண்டுபிடிப்புகளை மேம்படுத்த ரூ.5 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில், 2013-14ம் ஆண்டுக்கு மொத்தம் 8,517 மாணவர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 500 மாணவ, மாணவிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா, அடையாறில் உள்ள சிஎல்ஆர்ஐ வளாகத்தில் புதன்கிழமை நடந்தது. மாணவர்களுக்கு விருது மற்றும் காசோலைகளை வழங்கி உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பேசியதாவது:
மக்களின் தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு தொலை நோக்கு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. காற்றாலை மின்உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் இருக்கி றது. அதுபோல், சோலார் மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைய பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மாணவர்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திறன் களை மேம்படுத்தும் வகையில் அரசு சார்பில் ஆண்டுதோறும் இன்ஸ்பயர் விருது வழங்கப்பட்டு வருகிறது. மக்களுக்கான அடிப்படை பிரச்சினைகள், சவால் களை கருத்தில் கொண்டு புதிய தொழில்நுட்பங்களை கண்டு பிடிக்க ஆராய்ச்சிகளை மாணவர் கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் ஹேமந்த் குமார் பேசுகையில், ‘‘நாட்டில் மக்கள் தொகை அதிகரித் துள்ளது. ஆனால், இயற்கை வளங்கள் அப்படியே உள்ளன. இந்த வளங்களை மக்களுக்கு பயனுள்ள வகையில் மாற்ற வேண்டும். இதற்கான ஆராய்ச் சிகளை மேம்படுத்த வேண்டும். உணவு உற்பத்தி, மின்சாரம், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டி யுள்ளது. வரும் காலத்தில் குடிநீர், தட்பவெப்பநிலை, தரமான உணவு உள்ளிட்டவை சவால் களாக உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து துறை களிலும் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது’’ என்றார்.
விழாவில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் அய்யம்பெருமாள், ஆசிரியர்கள், மாணவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.