Last Updated : 31 Dec, 2015 03:49 PM

 

Published : 31 Dec 2015 03:49 PM
Last Updated : 31 Dec 2015 03:49 PM

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் கட்சி மாற தயாராகும் எம்எல்ஏக்கள்: வாக்காளர்களை கவரும் பணிகளில் மும்முரம்

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தொகுதியைத் தக்க வைக்க, வாக்காளர்களை கவரும் பணிகளை எம்எல்ஏக்கள் தொடங்கியுள்ளனர். தற்போதுள்ள எம்எல்ஏக்கள் பலரும் கட்சி மாற தயாராக உள்ளதை போஸ்டர் அடித்து தங்களின் எண்ணத்தை கோடிட்டு காட்டுகின்றனர். இதனால் யார் எக்கட்சியில் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் 30 தொகுதிகள் உள்ளன.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. அதையடுத்து அதிமுகவை கழற்றிவிட்டு ரங்கசாமி முதல்வரானார்.

தொடர்ந்து மக்களவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வென்றது. இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டு வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிமுகவுக்கு அவ்விடம் கிடைத்தது.

மாநிலங்களவை தேர்தலின் போது அரசு கொறடா நேரு தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு எதிராக போராட்டங்களும் நடத்திவருகிறார். அத்துடன் தனது கட்சியிலுள்ள அதிருப்தி எம்எல்ஏக்களின் முகமும் முதல்வருக்கு தெரியவந்தது.

காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களில் ரங்கசாமிக்கு நெருக்கமாக இருந்த மல்லாடி கிருஷ்ணாராவுக்கு மாநிலங்களவை தேர்தலில் சீட் தரப்படாததால் அதையடுத்து அவர் முதல்வருடன் நெருக்கமாக பார்க்க முடியவில்லை.

ரங்கசாமியுடன் நெருக்கமாக இருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களான மல்லாடி கிருஷ்ணாராவ், தேனீ ஜெயக்குமார், திருமுருகன் ஆகியோரை கட்சிக் கூட்டங்களுக்கு அழைப்பது தொடங்கி போஸ்டரில் புகைப்படம் அச்சடிப்பதையும் காங்கிரஸார் நிறுத்திக்கொண்டனர்.

திமுக எம்எல்ஏவான நந்தா சரவணன் ரங்கசாமி படத்துடன் போஸ்டர் அடித்து இலவசங்களை வழங்கத் தொடங்கியுள்ளார். கட்சி மாற தயாராக இருப்பதை போஸ்டர், பேனர்கள் மூலம் சூசகமாக பல எம்எல்ஏக்கள் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால் அரசியல்வாதிக ளிடம் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. வாக்காளர்களை கவர தற்போதுள்ள எம்எல்ஏக்கள் வீடுவீடாக சென்று காலண்டர், சர்க்கரை, அரிசி போன்றவற்றை வழங்குகின்றனர். சிலர் மளிகை பொருட்கள் தருகின்றனர். சிலர் பொங்கலை முன்னிட்டு கரும்பு, மளிகை பொருட்கள் தர உள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

இதுதொடர்பாக அரசியல் கட்சியினர் கூறுகையில், “புதுச்சேரியைப் பொறுத்தவரை கட்சியை விட தனிநபரின் செல்வாக்கு மிக முக்கியம். எம்எல்ஏ ஆவதற்கு எந்த கட்சிக்கும் மாற தயாராக பலர் இருக்கிறார்கள். கடந்த மாநிலங்களவை தேர்தலில் தனக்கு எதிராக செயல்பட்ட எம்எல்ஏக்களுக்கு என்.ஆர்.காங்கிரஸில் ரங்கசாமி சீட் தர வாய்ப்பு இல்லை.

இந்த இடங்களில் போட்டியிட புதிய வர்கள், காங்கிரஸ், திமுக கட்சிகளை சேர்ந்தோரும் விருப்பம் தெரிவிக்கின்றனர். ஆளுங்கட்சியில் சீட் கிடைக்காத நடப்பு எம்எல்ஏக்களும் மாற்றுக் கட்சியாகவோ, சுயேட்சையாகவோ களம் இறங்கத் தயாராகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் புதுச்சேரியில் யார் எக்கட்சியில் போட்டியிடுவார்கள் என்ற விவாதமும் தொடங்கியுள்ளது.

கூட்டணி உறுதி செய்யப்பட்டாலும் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்படும் வரை புதுச்சேரியில் குழப்பம் நீடிக்கும்” என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x