Published : 13 May 2021 03:11 AM
Last Updated : 13 May 2021 03:11 AM

வழிகாட்டி மதிப்பை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும்; பத்திரப் பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது: அமைச்சர் பி.மூர்த்தியின் ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு பதிவுத் துறை தலைவர் உத்தரவு

கோப்புப்படம்

சென்னை

பதிவுத்துறையின் செயல்பாடுகள் மற்றும் பணி சீராய்வுக் கூட்டம் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் கடந்த 10-ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

குறிப்பாக, அரசின் வருவாயை முழுமையாக அடைவதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், பொதுமக்களிடம் உரிய நம்பிக்கையைப் பெற அனைத்துப் பணியாளர்களும் வெளிப்படைத்தன்மையுடன் செயலாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

அமைச்சரின் அறிவுறுத்தல்கள் அடிப்படையில் பதிவுத் துறை தலைவர் பொ.சங்கர், அனைத்து சார் பதிவாளர்கள், மாவட்டப் பதிவாளர்கள், துணை பதிவுத் துறை தலைவர்கள் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

பத்திரப் பதிவுக்கு வருவோரிடம் சார் பதிவாளர்கள் நேரடியாகத் தொடர்புகொண்டு அவர்கள் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டும். இடைத்தரகர்கள் தலையீட்டை தவிர்க்கவும், அலுவலகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைத் தவிர்த்து கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பத்திரப் பதிவின்போது இணையதளத்தில் உள்ள வழிகாட்டி மதிப்பையே கடைப்பிடிக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அருகில் உள்ள சர்வே எண்ணின் அல்லது சம்பந்தப்பட்ட சர்வே எண்ணின் உட்பிரிவின் அதிக மதிப்பையோ, உயர்மதிப்பையோ கடைப்பிடிக்க வற்புறுத்தக்கூடாது.

வழிகாட்டிமதிப்பு இணையதளத்தில் தவறுதலாக இருப்பின் உடனடியாக பதிவுத்துறை தலைவருக்கு உரிய பரிந்துரையை அனுப்பி சரி செய்ய வேண்டும். அதில் தவறும் மாவட்ட பதிவாளர்கள், துணை பதிவுத் துறை தலைவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பல சர்வே எண்களில் கட்டுப்பட்ட சொத்து ஒரே நான்கு எல்லைக்குள் எழுதப்பட்டு இருப்பின் பதிவு அலுவலர்கள், அந்தந்த சர்வே எண்கள், உட்பிரிவுகளுக்கு உரிய வழிகாட்டி மதிப்பை கணக்கிட்டு கடைப்பிடித்தால் போதுமானதாகும்.

ஆவண சொத்தில் தொழிற்சாலை ஏதேனும் இருப்பின் அக்கட்டிடம் உள்ள சர்வே எண் அல்லது உட்பிரிவுக்கு மட்டும் உரியமதிப்பு நிர்ணயிக்க வேண்டும்.கட்டிடம் உள்ள சர்வே எண்களைத் தவிர்த்து மீதமுள்ள சர்வே எண் அல்லது உட்பிரிவுகளுககு வழிகாட்டியில் உள்ள விவசாய மதிப்பையே கடைப்பிடிக்க வேண்டும். இதை கண்காணிக்காத மாவட்டபதிவாளர் நிர்வாகம், தணிக்கை மற்றும் துணை பதிவுத் துறை தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைச்சர் அறிவுறுத்தியுள்ளபடி, பதிவுத் துறை அலுவலர்கள் எவ்வித புகார்களுக்கும் இடமின்றி வெளிப்படைத் தன்மையுடன் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும். இவ்வாறுசுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x