

முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் 19 தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு இலவச சிகிச்சை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கோவையில் சிகிச்சை அளிக்க 19 தனியார் மருத்துவமனைகள் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு பொது மருத்துவமனை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், நேரடியாக இந்த மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். சிகிச்சைக்கு ஆகும் தொகை முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். மிதமான தொற்று உள்ளவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.5 ஆயிரமும், தீவிர தொற்று உள்ளவர்களுக்கு ரூ.15 ஆயிரமும் காப்பீட்டு நிறுவனம் மூலம் மருத்துவமனைக்கு நேரடியாக வழங்கப்படும். சிகிச்சைக்கு அதிகப்படியாக தேவைப்படும் தொகையும், மருத்துவமனைகளால் காப்பீட்டு நிறுவனத்திடம் நேரடியாக பெற்றுக்கொள்ளப்படும். சிகிச்சை தொடர்பான சந்தேகங்களுக்கு 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்களை www.cmchistn.com என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூறும்போது, “தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் முதல் நாளிலேயே காப்பீட்டுத் திட்டத்தை பயன்படுத்தி சிகிச்சை பெறுகிறோம் என்பதைச் சொல்லிவிட்டு, மருத்துவமனையில் சேர்ந்தால், எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. அரசே முழு சிகிச்சைக் கட்டணத்தையும் ஏற்கும்.
சிகிச்சைக்கு செல்வோர் பழைய, புதிய குடும்ப அட்டைகள், முதல்வரின் காப்பீட்டு திட்ட அட்டை, நோயாளியின் ஆதார் அட்டை, ஆர்டி-பிசிஆர் பரிசோதனை முடிவு சான்று ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். கோவையில் காப்பீட்டு திட்டத்தின்கீழ் அரசு அங்கீகரித்துள்ள தனியார் மருத்துவமனைகளில் எங்கு காலியிடம் உள்ளது என்பதை அறிந்துகொள்ள 0422-1077 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்” என்றனர்.