Published : 13 May 2021 03:12 AM
Last Updated : 13 May 2021 03:12 AM

ஊரடங்கின் பலன் அடுத்த வாரம் தெரியும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

கோப்புப்படம்

சென்னை

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இரு வார ஊரடங்கின் பலன், அடுத்த வாரம் தெரியும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பிரிவை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, திமுகநாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடிஆகியோர் உடன் இருந்தனர்.

ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பி.கே.சேகர்பாபு, “இந்த மருத்துவமனையில் 300 படுக்கைகளுடன் கரோனா தீவிரசிகிச்சைப் பிரிவு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது இங்குள்ள 25 ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கை 50 ஆக உயர்த்தப்பட உள்ளது. போதிய அளவு செவிலியர்கள், மருத்துவர்களை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கின் பலன்அடுத்த வாரம் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் ஒவ்வொரு வார்டுகளிலும் தற்போது செயல்பட்டு வரும் 2 காய்ச்சல் தடுப்பு முகாம்கள் 4 ஆக உயர்த்தப்பட உள்ளது” என்றார்.

ஜெ.ராதாகிருஷ்ணன் கூறும்போது, “ஊரடங்கு உத்தரவால் தொற்று பரவும் சங்கிலி தடைபட்டுள்ளது. தொற்றுஅறிகுறி ஏற்பட்டவுடன் தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

ககன்தீப் சிங் பேடி கூறும்போது, “அறிகுறி இல்லாத தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் வசதி இல்லாமல் இருந்தால் அருகில் இருக்கும் கரோனா தொற்று தடுப்பு மையத்தை அணுக வேண்டும். மக்களுக்கு தேவையான படுக்கைகள் தயாராக உள்ளன.

சென்னையில் 59 தனியார் பரிசோதனை மையத்தில் எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகளை சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்கு தெரிவித்த பின்னர்தான் நோயாளிகளுக்கு தெரிவிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் எடுக்கப்படும் பரிசோதனையின் முடிவுகளை மாநகராட்சிக்கு தெரிவிக்காததால் எங்களால் உரிய நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கிறது.

அறிகுறிகள் இருந்தால் கூட அவர் கரோனா நோயாளி என்று கருதி, அவருக்கு கரோனா மருத்துவ தொகுப்பை வழங்க இருக்கிறோம். அப்படி வழங்கினால் பதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை குறைக்கலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x