

‘தூய்மை பாரதம்’ திட்டத்தில் கிராமந்தோறும், வீடுதோறும் கழிப்பிடங்கள் முழு மானியத்துடன் கட்ட மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டி வருகின்றன.
இந்த நேரத்தில், ‘எங்கள் ஊரில் இரண்டு கழிப்பிடங்கள் கட்டும்போதே தடைவிதிக்கப்பட்டு பணி முடிவடையாமல் நிற்கின்றன. அதில் ஒரு கழிப்பிடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளதாக ஆவணம் கிடைத்துள்ளது. ஆவணத்தில் உள்ள அந்த கழிப்பிடத்தை கண்டுபிடித்துத் தாருங்கள்’ எனக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர் கெண்டையூர் கிராம மக்கள்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சியில் 24-ம் வார்டுக்குள் வரும் கிராமம் கெண்டையூர். இங்குள்ள மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று நடந்த மனுநீதி நாளில் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அவர்கள் கூறியதாவது:
கெண்டையூர் அரிசன காலனியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மூன்று தலைமுறைகளாக வசித்து வருகிறோம். எங்கள் காலனியிலிருந்து 1 பர்லாங் தூரத்தில் ஒரு பொதுக் கழிப்பிடம் உள்ளது. அதை பயன்படுத்த எங்களை விடுவதில்லை. அதனால் எங்கள் காலனி பெண்கள், ஆண்கள், குழந்தைகள் எல்லோருமே கழிப்பிடத்துக்காக பொது வெளிக்கே செல்ல வேண்டியிருக்கிறது.
எனவே எங்களுக்கென கழிப்பிடம் கட்டித்தர கோரி கடந்த 1996-ம் ஆண்டு முதல் போராடி வருகிறோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் குடியிருப்புகளுக்கு அருகில் ஒரு பொது இடத்தில் கழிப்பிடம் கட்ட நகராட்சி முயற்சித்தது. அது ஒரு தனியார் தோட்டத்துக்கு அருகில் அமைந்ததால் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்பட்டது. அதனால் அப் பணி பேஸ் மட்டத்துடன் நின்றது.
5 ஆண்டுகளுக்கு முன்பு, அங்கிருந்து 100 மீட்டர் தள்ளி ஒரு கழிப்பிடம் கட்டத் தொடங்கினர். அதுவும் தனியார் தோட்டத்துக்கு அருகில் இருக்கிறது எனச் சொல்லி அங்குள்ளவர்கள் தடை பெற்று விட்டார்கள். அதுவும் பணி முடிவடையாமல் நின்றது.
இப்படியிருக்க, கடந்த 2000-ம் ஆண்டில் கெண்டையூர் அரிசன காலனி மக்களுக்காக ரூ.1.90 லட்சம் செலவில் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறையின் ஆவணம் (மனுவுடன் ஆவணம் இணைக்கப்பட்டுள்ளது) கிடைத்துள்ளது. எனவே அந்தக் கழிப்பிடத்தை அதிகாரிகள் கண்டுபிடித்துத் தரவேண்டும். கழிப்பிடம் இல்லாமல் நாங்கள் படும் துன்பம் சொல்லிமாளாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நாடகக் கலைஞர்கள்
முகாமில், க.க.சாவடி பொதுமக்கள் சார்பாக, ‘கோவை பாலக்காடு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் க.க.சாவடி முதல் எட்டிமடை வரை சுமார் 3 கிமீ சாலை 10 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. அதை சீர் செய்து தரவேண்டும்’ என்றும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக, ‘சிரவணம்பட்டி விரைவு அபிவிருத்தித் திட்டம் எண் டிடி 60 திட்டச் சாலையை அமைத்துத் தர வேண்டும்’ எனவும், கோவை மாவட்ட நாடக மற்றும் திரைப்பட துணை நடிகர்கள் பாதுகாப்பு நலச் சங்கம் சார்பாக, ‘கோவை மாநகராட்சி கலை அரங்கின் வாடகை நாடகக் கலைஞர்கள் செலுத்த முடியாத அளவில் உள்ளதால், அதன் வாடகையை நாடகக் கலைஞர்களின் நாடகங்களுக்கு மட்டும் குறைந்த வாடகையாக ரூ.1000 என நிர்ணயம் செய்து நலிந்து வரும் நாடகக் கலைஞர்களுக்கு வாழ்வு கொடுக்க வேண்டும்’ என்றும் பல்வேறு பொது நல மனுக்கள் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டன.