

தமிழகத்தில் கரோனா பாதிப்புஅதிகமுள்ள மாவட்டங்களின் பட்டியலில் திருநெல்வேலி 5-வது இடத்தை பிடித்திருக்கும் நிலையிலும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மதிக்காமல் காரணமின்றி பலரும்வாகனங்களில் சுற்றித் திரிகிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டு இதேகாலத்தில் கரோனா முதல் அலையின்போது பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ தாண்டாத நிலையில், நேற்று மட்டும் 857 பேருக்கு பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. கடந்த சில நாட்களாகவே பாதிப்பு எண்ணிக்கை தினமும் ஆயிரத்தை நெருங்கிவருகிறது. நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் பாதிப்பு தற்போது அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 105 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. மாவட்டம் முழுக்க 84 தடுப்பூசி மையங்களில் இதுவரை 84,596 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. தற்போது, 5610 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. மாவட்டத்தில் கரோனா பாதிப்பை குறைக்கவும், கரோனாபரவலை கட்டுப்படுத்தவும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசியத் தேவைகளை தவிர வேறு எந்த வாகனங்களுக்கும் அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கடந்த 2 நாட்களாகவே சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகம் காணப்படுகிறது. பேருந்து போக்குவரத்து இல்லாதநிலையில் அதிகளவில் இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் சாலைகளில் செல்கின்றன.
கரோனா பரவல் கவலை அளித்து வரும் நிலையிலும் மருந்து கடைக்கு போகிறேன், காய்கறி வாங்க போகிறேன் என்றெல்லாம் சொல்லி 3-வதுநாளாக நேற்றும் பலர் அத்தியாவசிய தேவையின்றி 12 மணிக்கு மேல் சுற்றித்திரிந்தனர். ஒருசிலர் இன்னமும் முகக்கவசம் அணியாமலும், முகக்கவசத்தை சரியான முறையில் அணியாமலும் வலம் வருகிறார்கள்.
திருநெல்வேலி மாநகரில் பல்வேறு இடங்களிலும் காவல்துறையினர் சோதனைச்சாவடிகளை அமைத்து கண்காணித்து வருகிறார்கள். தேவையின்றி வாகனங்களில் செல்வோரை எச்சரித்து அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் வாகன சோதனையின்போது பல்வேறு காரணங்களை சொல்லி வாகன ஓட்டிகள் தப்பித்துக் கொள்கிறார்கள்.
வண்ணார்பேட்டையில் மாநகரகாவல் துணை ஆணையர் சீனிவாசன் நேற்று முன்தினம் இரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது பலர் தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிவதை கண்டு, அந்த வாகன ஓட்டிகளை எச்சரித்தார். இதுபோல், மீண்டும் வந்தால்வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார். போலீஸார் எச்சரிப்பதுடன் நின்றுவிடுவதால் பலர் வாகனங்களில் தேவையில்லாமல் ஊர்சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே காரணமின்றி வாகனங்களில் செல்வோரை தடுக்க முடியும்.
உவரி கிராமத்தில் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான காவல்துறையினர் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அடிக்கடி வெளியே சுற்றாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொண்டதுடன், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் இலவச முகக்கவசங்கள் வழங்கினர்.
தென்காசி
கடையநல்லூரில் வட்டாட்சியர் ஆதிநாராயணன், நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும்அலுவலர்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, இப்ராஹிம் நகரில் உள்ள ஒரு காய்கறிகடையில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் இருப்பது தெரியவந்தது. அந்த கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
இதேபோல், சங்கரன்கோவிலில் நேற்று மதியம் 12 மணிக்கு மேல் கூட்டமாக நின்று டீ குடித்துக்கொண்டு இருந்தனர். நகராட்சி அதிகாரிகள், அங்கு சென்று விதியை மீறி செயல்பட்ட கடைக்கு சீல் வைத்தனர்.