அரசுக் கல்லூரி விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக நியமிப்பதை எதிர்த்து மேல்முறையீடு

அரசுக் கல்லூரி விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக நியமிப்பதை எதிர்த்து மேல்முறையீடு
Updated on
1 min read

அரசுக் கல்லூரி கவுரவ உதவியாளர்களை உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கலான மேல்முறையீடு மனுவுக்கு தமிழக உயர் கல்வித்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்காசி வாசுதேவநல்லூரைச் சேர்ந்த பாண்டியம்மாள், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

அரசு கலைக் கல்லூரிகளில் 2331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக 4.10.2019-ல் அறிவிப்பு வெளியானது. தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வரும் நான் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தேன்.

இந்நிலையில் அரசுக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணிபுரிபவர்களை உதவிப் போராசிரியர்களாக நியமிக்க முடிவு செய்துள்ளனர்.

உதவிப் பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவே நிரப்ப வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு விதியில் கூறப்பட்டுள்ளது.

இதனால் அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக நியமிக்க தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் என் கோரிக்கையை அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் அரசுக் கல்லூரிகளில் 5 ஆண்டுகளாக கவுரவ விரிவுரையாளர்காக பணிபுரிந்து வருவோர்களை உதவிப் பேராசிரியர்களாக நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. இதற்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தேன்.

என் மனுவை விசாரித்த தனி நீதிபதி, சான்றிதழ் சரிபார்ப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இறுதி விசாரணையில் என் மனுவை தள்ளுபடி செய்து தனி நீதிபதி 29.3.2021ல் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து அரசுக் கல்லூரிகளில் 5 ஆண்டுகளாக கவுரவ விரிவுரையாளராக பணிபுரிந்து வருவோர்களை உதவிப் பேராசிரியர்களாக நியமிக்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.கிருஷ்ணவள்ளி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மேல்முறையீடு மனு தொடர்பாக உயர்க் கல்வித்துறை முதன்மை செயலர், கல்லூரி கல்வி இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in