

வேலூர் மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக 3 தாலுக்காக்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 351 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் இவை அனைத்தும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 698 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமல் ஏராளமான நோயாளிகள் அவதியுற்று வருகின்றனர்.
இத்துயரைப் போக்க வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை, குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
இது குறித்து ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறியதாவது, ‘‘தமிழக அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு காலத்தில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை தனியாக செயல்படும் காய்கறி, மளிகை, இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நேரங்களில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அவசியமின்றி வெளியே சுற்றித்திரிந்ததாலும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இருந்ததால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4,302 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3,607 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்தில் 2,763 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் கட்டுப்பாடுடன் இல்லாவிட்டால் அடுத்து வரும் 2 வாரங்களில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சாதாரண படுக்கையில் 809 நோயாளிகளும், ஆக்சிஜன் படுக்கையில் 223 நோயாளிகளும், தீவிர சிகிச்சைப்பிரிவில் 121 நோயாளிகளும், கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் 221 நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் 2,233 பேர் வீடுகளின் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்காக 895 படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் 1,311 படுக்கைகளும், சிறப்பு சிகிச்சை மையங்களில் 2,483 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
வேலூர் மாவட்டத்தில் நோய்த் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் புதிதாக 34 தீவிர சிகிச்சை படுக்கைகள் வரும் 14-ம் தேதி பயன்பாட்டுக்கு வர உள்ளது.
மேலும் இந்த மருத்துவமனையில் செப்டிக் வார்டு, தீக்காய சிகிச்சை வார்டு, காசநோய் வார்டில் வரும் 16-ம் தேதிக்குள் 140 ஆக்சிஜன் படுக்கைகள் உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறது. இது தவிர புதிய சீமாங் பிளாக்கில் அடுத்த 10 நாட்களில் கூடுதலாக 90 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்படும்.
இதுமட்டுமின்றி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் 50 சாதாரண படுக்கைகளை ஆக்சிஜன் படுக்கையாக மாற்றி வரும் 18-ம் தேதிக்குள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. அதேபோல, பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் 37 ஆக்சிஜன் படுக்கை வசதி வரும் 15-ம் தேதிக்குள் பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறாக, வேலூர், குடியாத்தம், பேரணாம்பட்டு என 3 தாலுக்காக்களில் 351 ஆக்சிஜன் படுக்கை வசதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் கரோனா விதிமுறைகளை பின்பற்றாத 15,454 பேர்களிடம் இருந்து 34 லட்சத்து 3 ஆயிரத்து 700 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் அவசியமில்லாமல் வெளியே வர வேண்டாம். பொதுமக்கள் ஒத்துழைப்பு மிக முக்கியமானதாகும். வேலூர் மாவட்டத்தில் மே 12-ம் தேதி (இன்று) வரை 1 லட்சத்து 82 ஆயிரத்து 497 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே தடுப்பூசி செலுத்தியதில் வேலூர் மாவட்டம் 4-ம் இடத்தில் உள்ளது’’.இவ்வாறு அவர் தெரிவித்தார்.