ஊரடங்கு தளர்வுக்குப் பிறகே மதுரை ஆவின் இயக்குனர்கள் தேர்தல் நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கு தளர்வுக்குப் பிறகே மதுரை ஆவின் இயக்குனர்கள் தேர்தல் நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

கரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகே மதுரை ஆவின் இயக்குனர்கள் தேர்தல் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை சக்கரைப்பட்டி தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் பி.பெரியகருப்பன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை ஆவினில் காலியாக 11 இயக்குனர்கள் பணியிடங்களை நிரப்ப மே 24-ல் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மே 17-ல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா 2ம் அலை பரவல் தீவிரமாக இருப்பதால் தமிழகத்தில் மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு காலத்தில் ஆவின் இயக்குனர்களுக்கான தேர்தல் நடத்துவது கரோனா தொற்று பரவலை அதிகரிக்க செய்யும். இயக்குனர்கள் குழு தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ள 800 வாக்காளர்கள் மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ளனர்கள். அவர்கள் வாக்களிப்பதற்காக மதுரை ஆவின் அலுவலகத்திற்கு வருவதில் சிரமங்கள் உள்ளன.

எனவே, மதுரை ஆவினுக்கு 11 இயக்குனர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்த தடை விதித்து, ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.கிருஷ்ணவள்ளி அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆவின் வழக்கறிஞர் மாரீஸ்குமார் வாதிடுகையில், கரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகே புதிய அறிவிப்பாணை வெளியிடப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என்றார்.

இதையடுத்து கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு முறையாக அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறி மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in