

கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணி நியமனத்துக்கான நேர்முகத் தேர்வு இன்று நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்று தொடர்ந்து புகார்கள் எழுப்பப்பட்டு வந்தன. இந்நிலையில் கரோனா நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், காரைக்காலில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்கள், கிராமப்புறச் செவிலியர்கள், ஆய்வகத் தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்டோரை நியமிக்க புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதனடிப்படையில் காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் மருத்துவர்களுக்கான நேர்முகத் தேர்வு கடந்த 10-ம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில் இன்று அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் செவிலியர்களுக்கான நேர்முகத் தேர்வு காலை முதல் மாலை வரை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, மாவட்ட நலவழித்துறை துணை இயக்குநர் டாக்டர் கே.மோகன்ராஜ் மற்றும் 2 மருத்துவ வல்லுநர்கள் நேர்முகத் தேர்வை நடத்தினர். 57 பேர் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில், 260 பேர் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டனர். இதற்கான முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாளை (மே.13) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கிராமப்புறச் செவிலியர், காலை 10 முதல் மதியம் 1 மணி வரை ஆய்வகத் தொழில்நுட்பவியலாளர் ஆகியோருக்கான நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.