Published : 12 May 2021 05:28 PM
Last Updated : 12 May 2021 05:28 PM

தடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசி கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. ஆக்சிஜன் தேவைக்கு ஏற்ப அண்டை மாநிலங்களிலிருந்து ஆக்சிஜனைப் பெறவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (12.5.2021) தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெற்ற கலைவாணர் அரங்கிலுள்ள முதல்வர் அறையில், தமிழகத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ளவர்களுக்கு, மாநில அரசுகளே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி, தமிழகத்திற்கு சுமார் 13 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடு, 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்குப் போதிய அளவில் இல்லாததால், உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, குறுகிய காலத்திற்குள் 18 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு முனைப்புடன் எடுக்கும்.

மேலும், தமிழகத்தின் ஆக்சிஜன் பயன்பாட்டை ஒப்பிடும்போது, நமது மாநிலத்திற்கான மத்திய அரசின் ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது. இதனை உயர்த்தி வழங்கிட வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலின், பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை ஏற்று, தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 280 டன்னிலிருந்து 419 டன்னாக உயர்த்தப்பட்டுள்ள போதிலும், இன்னும் கூடுதலாக ஆக்சிஜன் தமிழகத்திற்குத் தேவைப்படுகிறது.

எனவே, போதிய ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளை உடனடியாக அமைத்திடவும், பிற மாநிலங்களில் உள்ள எஃகு உற்பத்தி தொழிற்சாலைகளிலிருந்து தமிழகத்திற்கு ரயில்கள் மூலமாக ஆக்சிஜனைக் கொண்டு வருவதற்கும், அவ்வாறு பெறப்படும் ஆக்சிஜனை தேவைப்படும் மருத்துவமனைகளுக்குச் சீராக விநியோகம் செய்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுத்திடுமாறு தொழில் துறைக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும் முதல்வர் உத்தரவிட்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், தொழில் துறை முதன்மைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x