Published : 12 May 2021 04:44 PM
Last Updated : 12 May 2021 04:44 PM

புதுச்சேரியில் சுயேச்சை உறுப்பினர்களை விலைபேசும் மலிவான வியாபாரத்தில் பாஜக: முத்தரசன் கண்டனம்

புதுச்சேரியில் சுயேச்சை உறுப்பினர்களை விலைபேசும் மலிவான வியாபாரத்தில் பாஜக ஈடுபட்டுள்ளதாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (மே 12) வெளியிட்ட அறிக்கை:

"அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், 30 உறுப்பினர்கள் கொண்ட புதுச்சேரி மாநில சட்டப்பேரவைக்கு எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையுடன் தேர்வு செய்யப்படவில்லை. அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் 10, திமுக 6, பாஜக 6, சுயேச்சைகள் 6, காங்கிரஸ் 2 என்ற முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தலுக்கு முந்தைய கூட்டணி என்ற முறையில், பாஜகவுடன் சேர்ந்து என்.ரங்கசாமி முதல்வராகப் பொறுப்பேற்றார். அவர் முதல்வர் பொறுப்பேற்றதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் சென்னை மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சூழ்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆளுநர் மாளிகை மூலம் அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு வந்த பாஜக, தற்போது குறுக்கு வழியில் புதுச்சேரியில் அமைச்சர்களை நியமிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டு காலனிப் பகுதியாக இருந்த புதுச்சேரி மாநிலப் பகுதி விடுதலை பெற்ற பின்னர், இந்திய ஒன்றியத்துடன் இணைப்பதற்கான ஆட்சி பரப்பு சட்டம் - 1963 நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தில் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்படாத மக்கள் உணர்வுகளை பிரதிபலிக்க 3 உறுப்பினர்களை நியமனம் செய்ய வழிவகை உருவாக்கப்பட்டுள்ளது.

சட்டத்தில் வழிவகை செய்யப்பட்ட போதிலும், 1985ஆம் ஆண்டு வரை உறுப்பினர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. 1985 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலும், சட்டப்பேரவை பரிந்துரைத்தவர்களை மட்டுமே உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர். இந்த ஜனநாயக நடைமுறையை மத்திய பாஜக அரசு நிராகரித்து, தனது உறுப்பினர்களை நியமித்தது.

இந்த அத்துமீறல் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், 'நியமன உறுப்பினர்களை நியமிப்பதற்காக தெளிவான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்' எனக் கூறப்பட்டது. இதனையும் பாஜக மதிக்கவில்லை.

இந்த நிலையில், அமித் ஷாவின் உள்துறை அமைச்சகம் புதுச்சேரி மாநில சட்டப்பேரவைக்கு மூன்று உறுப்பினர்களைத் தன்னிச்சையாக நியமித்து, தனது எண்ணிக்கையை ஒன்பதாக உயர்த்திக்கொண்டு, சுயேச்சை உறுப்பினர்களை விலைபேசும் மலிவான வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன. புதுச்சேரி மாநில மக்களின் உணர்வுகளுக்கு எதிராகச் செயல்படும் பாஜகவின் அரசியல் சூதாட்டங்களுக்கு ஆளுநர் அதிகாரம் பயன்படுத்தப்படுவது வெட்கக்கேடானது.

முதல்வர் பொறுப்பேற்றுள்ள என்.ரங்கசாமியை விரல் நுனியில் கட்டி ஆட வைக்கும் பொம்மையாக்கிக் கொள்ளும் பாஜகவின் வஞ்சகத்தை முறியடிக்க ஜனநாயக, மதச்சார்பற்ற கட்சிகளும், சக்திகளும் அணிதிரண்டு போராட முன் வரவேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு அறைகூவி அழைப்பதுடன், புதுச்சேரி மக்களின் ஜனநாயக உரிமை போராட்டத்திற்கு தமிழக மக்கள் பேராதரவு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது".

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x