Last Updated : 12 May, 2021 05:45 PM

 

Published : 12 May 2021 05:45 PM
Last Updated : 12 May 2021 05:45 PM

வேலூர் மாவட்டத்தில் எஸ்.பி. செல்வகுமார் உட்பட இன்று ஒரே நாளில் 698 பேருக்கு கரோனா

வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உட்பட 698 பேருக்கு இன்று கரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கரோனா 2-வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பெருந்தொற்று வேகமாகப் பரவி வருவதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தைக் காட்டிலும், வேலூர் மாவட்டத்தில் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வேலூர் மாநகராட்சிப் பகுதிகளில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன.

வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை 32 ஆயிரத்து 481 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில், 28 ஆயிரத்து 428 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 3,607 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலன் அளிக்காமல் இதுவரை 446 பேர் உயரிழந்துள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமலும், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை கிடைக்காமலும் அபாயக் கட்டத்தில் பலர் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் இன்று (மே 12) ஒரே நாளில் 698 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வகுமாருக்கும் கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

வேலூர் மாநகராட்சிப் பகுதியில் மட்டும் இன்று ஒரே நாளில் சுமார் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நகர்ப்புறங்களைத் தொடர்ந்து கிராமப் பகுதிகளிலும் 200-க்கும் மேற்பட்டோர் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாநகராட்சிப் பகுதியைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்டோர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நகர்ப்புறங்களைத் தொடர்ந்து கிராமப்பகுதிகளில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கிராம ஊராட்சி சார்பில் கிராமம் தோறும் கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, தகுதியுள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என, சுகாதாரத்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் பெருகி வரும் கரோனா தொற்றைக் குறைக்க வேண்டுமென்றால், அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பொதுமக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். அவசியம் இல்லாமல் வெளியே சுற்றுவதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.

வீட்டை விட்டு வெளியே வருவோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். எங்கு சென்றாலும் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். கூட்டம் சேருவதைத் தவிர்க்க வேண்டும். வெளியே சென்று வீடு திரும்பினால் கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.

காய்ச்சல், இருமல், உடல் சோர்வு, கண் எரிச்சல், சளி உள்ளிட்ட தொந்தரவு இருந்தால், சற்று தாமதிக்காமல் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வந்து கரோனா பரிசோதனை செய்துகொண்டு, அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். பரிசோதனைக்கு பயந்து நிறைய பேர் அஜாக்கிரதையாக உள்ளனர். கரோனா குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இருந்தால் மட்டுமே கரோனாவை வெல்ல முடியும்.

எனவே, தகுதி வாய்ந்த அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கரோனாவைத் தடுக்க பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என, சுகாதாரத் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x