Last Updated : 12 May, 2021 03:56 PM

 

Published : 12 May 2021 03:56 PM
Last Updated : 12 May 2021 03:56 PM

மருந்து இருந்தும் மக்களிடம் ஆர்வம் இல்லை; தூத்துக்குடி மாவட்டத்தில் 8 சதவீதம் பேர் மட்டுமே கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்: சிறப்பு கண்காணிப்பு அலுவலர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 8 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். தேவையான தடுப்பூசி மருந்துகள் இருந்த போதிலும் தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது என, தூத்துக்குடி மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட சிறு மற்றும் குறு தொழில் சங்கம் (துடிசியா) சார்பில் சங்க கூட்டரங்கில் இலவச கரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார்.

தூத்துக்குடி மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு கண்காணிப்பு அலுவலரான கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மை செயலர் குமார் ஜெயந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:

தமிழகம் முழுவதும் கரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தகுதியுள்ள அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். சென்னை மாநகராட்சி பகுதியில் 53 சதவீதம் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 8 சதவீதம் மக்களுக்கு தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது மிகவும் குறைவான சதவீதம் ஆகும். தடுப்பூசி போட்டுள்ளவர்களுக்கு தொற்று வருவது குறைவாக உள்ளது. மேலும் பாதிப்பும் குறைவாக உள்ளது. சமூக வலைத்தளங்களில் வரக்கூடிய தவறான தகவல்களை நம்ப வேண்டாம். 45 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 15,000-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. ஆனால் ஒரு நாளைக்கு 900 நபர்கள் மட்டுமே ஊசி போட்டு கொள்கின்றனர். தேவையான தடுப்பூசிகள் இருப்பில் இருந்தும் ஊசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே துடிசியா போன்ற அமைப்புகள் இதுபோன்ற முகாம்களை தொடர்ந்து நடத்த வேண்டும். தடுப்பூசி போட்டுள்ள நபர்கள் மற்றவர்களுக்கும் தடுப்பூசி போடுவது குறித்து எடுத்துசொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.

மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் பேசியதாவது: தடுப்பூசி முகாம்களை அதிக அளவில் நடத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் துடிசியா மூலம் தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. நமது நாடு எதிர்கொண்டுள்ள கொரோனா மிக கொடிய தொற்றாகும். நாம் அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்தால் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும். தொழில்களையும் செய்ய முடியும்.

கரோனவுக்கு எதிராக இரண்டு அஸ்திரங்கள் உள்ளன. ஒன்று சமூக இடைவெளியை கடைபிடித்தல், கை கழுவுதல், முககவசம் அணிதல் போன்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகளாகும். மற்றொன்று தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் ஆகும். தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளவர்களுக்கு கொரோனா வராது. ஒரு சிலருக்கு மட்டுமே வந்துள்ளது. ஆனால் அவர்களுக்கு பாதிப்புகள் மிக குறைவாகவே இருந்து வருகிறது.

45 வயதுக்கு மேற்பட்டுள்ள அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டாலும் முககவசம் அணிய வேண்டும். இந்த தடுப்பூசி முகாமை இப்பகுதி மக்கள் மற்றும் பல்வேறு தொழிற்சாலை அலுவலர்கள், குடும்பத்தினர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இதுபோன்ற பல்வேறு முகாம்களை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றார் ஆட்சியர்.

நிகழ்ச்சியில் துடிசியா தலைவர் நேரு பிரகாஷ் வரவேற்று பேசினார். தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சொர்ணலதா, மாநகராட்சி நல அலுவலர் வித்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x