அஸ்ஸாமில் உள்ள சாட்சியை காணொலி மூலம் விசாரணை செய்த உதகை மகளிர் நீதிமன்றம்

அஸ்ஸாமில் உள்ள சாட்சியை காணொலி மூலம் விசாரணை செய்த உதகை மகளிர் நீதிமன்றம்
Updated on
1 min read

உதகை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி அருணாச்சலம், அஸ்ஸாமை சேர்ந்த சாட்சியிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தினார். உதகையில் உள்ள நீதிமன்றத்திலிருந்து பிற மாநிலத்தில் உள்ள சாட்சியிடம் காணொலி மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது இதுவே முதன்முறையாகும்.

நீலகிரி மாவட்டம் சேரம்பாடி பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நடந்த மோசடி தொடர்பான வழக்கின் விசாரணை உதகை மகளிர் நீதிமன்றத்தில் இன்று நடந்தது.

நீதிபதி அருணாச்சலம், அஸ்ஸாம் மாநிலம் குவஹாட்டியில் உள்ள சாட்சியிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தினார்.

கரோனா பரவல் காலகட்டத்தில் புதிய முயற்சியாக சாட்சியிடம் காணொலி மூலம் விசாரணை நடத்தப்பட்டது.

மகளிர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் மாலினி பிரபாகரன் கூறும் போது, ‘நீலகிரி மாவட்டம் சேரம்பாடி பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ரூ.2 லட்சம் அளவில் முறைகேடு நடந்தது. இது குறித்து விஜய் பிள்ளை என்பவர் கொடுத்த புகாரின் பேரில், சிபிசிஐடி போலீஸார் கடந்த 2001-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த வழக்கில் 9 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு, 63 சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், சேரம்பாடியில் பணிபுரிந்த உஜ்வல் என்பவர் தற்போது, மகராஷ்டிரா மாநிலத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் இந்த வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்தார்.

அதன் பேரில் நீதிபதி அருணாச்சலம், கரோனா காலக்கட்டத்தில் சாட்சி உதகை வந்து சாட்சியம் அளிப்பதில் உள்ள சிரமத்தை உணர்ந்து, காணொலி மூலம் சாட்சியிடம் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்தார்.

மேலும், அஸ்ஸாம் உயர்நீதிமன்றத்தில் அதற்கான ஏற்பாடுகளை செய்து, இன்று காணொலி காட்சி வாயிலாக விசாரணை நடத்தினார்.

கரோனா காலக்கட்டத்தில் யாருக்கும் பாதிப்பில்லாமல் காணொலி மூலம் விசாரணை நடத்தப்படுவது முன்மாதிரியான முன்னெடுப்பாகும். இதனால், மக்களின் சிரமம் குறைவதுடன், காலம் மற்றும் பண விரயம் குறையும்’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in