வேலூர் மாவட்டத்தில் 2-வது தவணை கோவாக்சின் கிடைக்காமல் அவதி; யாரும் அச்சப்பட வேண்டாம்- சுகாதாரத்துறை

வேலூர் மாவட்டத்தில் 2-வது தவணை கோவாக்சின் கிடைக்காமல் அவதி; யாரும் அச்சப்பட வேண்டாம்- சுகாதாரத்துறை
Updated on
2 min read

வேலூர் மாவட்டத்தில் ‘கோவாக்சின்’ தடுப்பூசியை முதல் முறையாகப் போட்டவர்கள் 2-வது தவணை தடுப்பூசியை போட முடியாமல் அலைக்கழிக்கப்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், முதல் தடுப்பூசி பயன் இல்லாமல் போய் விடுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் நாள்தோறும் பெருகி வரும் கரோனா தொற்றில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்ற அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. கடந்த சில வாரங்களாக கரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

நோய்த் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள கரோனா தடுப்பூசி போடுவதே தீர்வு என அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர். அரசு அறிவிப்பின்படி தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 45 வயதுக்குக் குறைவானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுள்ளனர். ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போட்டவர்கள் 6 முதல் 8 வாரங்களுக்குப் பிறகும், ‘கோவாக்சின்’ தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 4 வாரங்களுக்குப் பிறகும் 2-வது தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்திற்கு 7 ஆயிரம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி மருந்துகள் வந்தன. மிகக் குறைந்த அளவிலேயே தடுப்பூசி வந்துள்ளதால், முதன் முறையாகத் தடுப்பூசி போடுபவர்களுக்கு இந்த மருந்துகள் ஒதுக்கப்படவில்லை. ஏற்கெனவே தடுப்பூசி போட்டவர்கள் 2-வது தடுப்பூசி போட வேண்டிய கட்டாயம் உள்ளதால், இந்த 7 ஆயிரம் தடுப்பூசி மருந்து 2வது முறை தடுப்பூசி போடுவதற்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதையடுத்து, 2-வது தவணை தடுப்பூசி போடுபவர்கள் அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று 2-வது தவணை தடுப்பூசி போட்டு வருகின்றனர். கோவிஷீல்டு மருந்துகள் மட்டுமே தற்போது கையிருப்பு இருப்பதால் அந்தத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டும் 2-வது தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர்.

முதல் முறையாக ‘கோவாக்சின்’ தடுப்பூசி போட்டவர்களுக்கு அந்த மருந்து தற்போது கையிருப்பு இல்லாததால் 2-வது தவணை போடச் செல்லும் மக்கள், தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

கோவாக்சின் முதல் தடுப்பூசி போட்டு 4 வாரங்களுக்கு மேலாகியும் 2- வது தடுப்பூசி போடாததால் முதல் தடுப்பூசி போட்டவர்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கெனவே போட்ட தடுப்பூசி பயனில்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் அவர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதனால் விரைவில் கோவாக்சின் தடுப்பூசி 2-வது டோஸ் போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாகச் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது, ‘‘ வேலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு கரோனா முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 50 ஆயிரம் பேர் மட்டுமே 2வது தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்துக்குக் குறைந்த அளவிலேயே தடுப்பூசி மருந்துகள் வருவதால் தடுப்பூசி போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (மே.12) மேலும் 4 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வேலூர் மாவட்டத்திற்கு வந்தன. இந்த மருந்துகள் வேலூர் மாநகராட்சி பகுதிக்கு அதிக அளவில் ஒதுக்கப்பட்டுள்ளன.

கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்கள் 2-வது முறையாக டோஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் முதல் தடுப்பூசி போட்டவர்கள் அச்சமடையத் தேவையில்லை. வெளிநாடுகளில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் 12 வாரங்களுக்குப் பிறகும், கோவாக்சின் முதல் தடுப்பூசி போட்டவர்கள் 8 வாரங்களுக்கு பிறகும் 2-வது தடுப்பு ஊசி செலுத்தி கொள்கின்றனர்.

முதல் தவணை தடுப்பூசி போடுவதால் ஓரளவு பாதுகாப்பு கிடைக்கும். 2-வது தடுப்பூசி போடுவதால் அதிகப் பாதுகாப்பு கிடைக்கும் என்பதே உண்மை. முதல் முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கட்டாயமாக 2-வது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முதல் தடுப்பூசி போட்டவர்கள் 2- வது ஊசி போடுவதற்குக் காலதாமதம் ஆனாலும் மீண்டும் ஒரு முறை முதல் தடுப்பூசி போட வேண்டிய கட்டாயம் இல்லை. வேலூர் மாவட்டத்தில் விரைவில் கோவாக்சின் 2-வது தவணை தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அச்சப்படத் தேவையில்லை’’. என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in