

மேற்கு மாம்பலம், சின்மயா நகர், வில்லிவாக்கம் பகுதிகளில் தேங்கியிருந்த குப்பையை அகற்றும் பணியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரடியாக ஈடுபட்டார். கட்சிப் பாகுபாடு காரணமாக மக்களுக்கு நிவாரண உதவிகள் முறையாக சென்றடையவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
சென்னை, புறநகர் பகுதிகளில் மழை, வெள்ளத்தால் தெருக்களில் எல்லாம் குப்பை மலைபோல தேங்கியுள்ளது. அவற்றை அகற்றும் பணியில் அரசும் பல்வேறு கட்சியினர், தொண்டு நிறுவனத்தினர் ஈடுபட்டுள்ளனர். தேமுதிக சார்பிலும் அந்தந்த பகுதியில் குப்பை அகற்றும் பணி நடந்து வருகிறது.
சென்னை மேற்கு மாம்பலம் கோவிந்தன் நகர் பகுதியில் தென்சென்னை மாவட்ட தேமுதிக வினர் நேற்று குப்பையை அகற்றினர். இதில் விஜயகாந்த் பங்கேற்று குப்பையை அகற்றினார். மாவட்டச் செயலாளர் வி.என்.ராஜன் உள்ளிட்ட பலர் இப்பணியில் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரம் மூலமும் குப்பை அகற்றப்பட்டது.
பின்னர் நிருபர்களிடம் விஜய காந்த் கூறியதாவது:
சென்னையில் வெள்ளம் வடிந்துள்ள நிலையில், பல இடங்களில் குப்பை மலை போல் தேங்கியுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் ஆபத்து உள்ளது. எனவே, சென்னை மாநகராட்சியின் அனைத்து வட்டங்களிலும் குப்பை அகற்றும் பணியில் தேமுதிக ஈடுபட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். ஆனால், நிவாரண பொருட்களை ஆளுங்கட்சி ஆட்களுக்கு மட்டுமே கொடுக்கின்றனர். தேமுதிக, திமுக உள்ளிட்ட கட்சிகளைச் ேசர்ந்தவர்களுக்கு வழங்க மறுக்கின்றனர். கட்சிப் பாகுபாடு காட்டப்படுவதால், நிவாரணங்கள் மக்களுக்கு முறையாக சென்று சேரவில்லை.
நிவாரணப் பணிகளை மேற் கொள்வதில் மத்திய, மாநில அரசு களிடம் ஒற்றுமை இல்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நேரடியாக பார்க் கவில்லை. எதற்கெடுத்தாலும் மத்திய அரசையே எதிர்பார்க்கா மல், மாநில அரசும் கூடுதல் பணிகளை செய்ய வேண்டும். செம்பரம்பாக்கம் ஏரியை முறையாக திறந்து விட்டிருக்க வேண்டும். ஆறுகளில் வெள்ளம் ஏற்படுவதை தடுப்பதற்கு, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிகளையும், நீர்நிலைகளையும் முன்கூட்டியே முறையாக தூர்வாரியிருக்க வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.
கே.கே.நகரில் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் ஆகியோர் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.