தமிழகத்தில் கரோனா பரவல் சற்று குறைகிறது: ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தில் கரோனா பரவல் சற்று குறைகிறது: ராதாகிருஷ்ணன் பேட்டி
Updated on
1 min read

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் கடந்த சில நாட்களாக தொற்றுப் பரவலின் ஏற்றத்தில் சிறு கட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை பெரியார் நகர் புறநகர் மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், ’’இந்தியாவில் கரோனா பரவல் பன்மடங்கு உயர்ந்துள்ளது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் படிப்படியாக தொற்றுப் பரவல் அதிகரித்து வந்தது. எனினும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் கடந்த சில நாட்களாகத் தொற்றுப் பரவலின் ஏற்றத்தில் சிறு கட்டுப்பாடு காணப்படுகிறது.

இந்த அரிய வாய்ப்பைப் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் இன்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கை மக்கள் முழுமையாகப் பயன்படுத்தி, பாதுகாப்புடன் இருக்க வேண்டும். கூட்டம் சேராமல் தடுக்க வேண்டும்.

தொற்றுப் பரவலைக் குறைக்கப் பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. மக்கள் லேசான அறிகுறி ஏற்பட்டாலும், பரிசோதனை செய்து, தங்களை உடனடியாகத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in