Published : 12 May 2021 11:22 AM
Last Updated : 12 May 2021 11:22 AM

புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிப்பதா? மக்கள் தீர்ப்பை மாசுபடுத்த வேண்டாம்: துரைமுருகன் கண்டனம்

புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிப்பதா என, திமுக பொதுச் செயலாளரும் தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, துரைமுருகன் இன்று (மே 12) வெளியிட்ட அறிக்கை:

"புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்கும் முன்பே மூன்று நியமன எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்திருப்பது கண்டனத்திற்குரியது.

சட்டப்பேரவை ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த நடவடிக்கைக்குத் திமுகவின் சார்பில் கடும் எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கிறேன். '30 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்டதுதான் புதுச்சேரி சட்டப்பேரவை' எனத் தெளிவாக இருக்கின்ற நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை இந்த நியமன எம்எல்ஏ-க்கள் மூலம் 33 ஆக உயர்த்தி, மக்கள் அளித்த தீர்ப்பை மாசுபடுத்த முனைவது வேதனைக்குரியது.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுச்சேரி சட்டப்பேரவைக்கு இன்னும் சபாநாயகர் தேர்வு செய்யப்படவில்லை. புதிய சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை.

அதற்குள்ளாக தங்கள் கூட்டணியின் தலைவராக இருக்கும் முதல்வரைக் கூட கலந்து பேசாமல் இப்படியொரு நியமனத்தை மத்திய அரசு செய்து பாஜகவின் எண்ணிக்கையை 9 ஆக உயர்த்தியிருப்பது எதேச்சதிகாரமானது.

புதிதாக அமைந்திருக்கும் ஆட்சியின் ஸ்திரத்தன்மையை இந்த நியமன எம்எல்ஏக்களின் பலத்தை வைத்துச் சீர்குலைத்து, கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக செய்யும் முயற்சியே அது என்ற சந்தேகம் புதுச்சேரி மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

எனவே, மத்திய பாஜக அரசு இந்த மூன்று நியமன எம்எல்ஏக்கள் நியமனத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், நியமன எம்எல்ஏக்களை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஸ்திரத்தன்மைக்கு ஆரம்பத்திலேயே ஆபத்தை ஏற்படுத்தும் முயற்சியைக் கைவிட்டு, புதுச்சேரி மக்களின் நலனிலும், மாநிலத்தில் நிலவும் கரோனா பரவலைத் தடுத்திட வேண்டிய நடவடிக்கைகளிலும் ஒன்றிய பாஜக அரசு கவனம் செலுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x