

கடந்த சில மாதங்களாக சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து சமையல் எண்ணெய் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினருடன் அரசு ஆலோசனை நடத்தியது.
நாடு முழுவதும் அத்தியாவ சியப் பொருட்களின் விலை கிடு கிடுவென உயர்ந்து வருவதால் தமிழகத்தில் விலைவாசியை தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருப் பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே அரிசி, எண்ணெய் மற்றும் காய்கறி வகைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில், அனைத்து மாநில அரசுகளிடமிருந்தும் கிடைக்கப் பெற்ற அத்தியாவசியப் பொருட்களின் வாராந்திர விலைப் பட்டியலை உன்னிப்பாக கவனித்து வந்த மத்திய அரசு, குறிப்பிட்ட சில பொருட்களின் விலை தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருவதைக் கண்டு கவலையடைந்தது.
இதைத் தொடர்ந்து, விலைவாசி உயர்வுக்கான காரணத்தை அறிந்து அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியுமா என்று கேட்டு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடந்த வாரத்தில் தகவல் அனுப்பியது.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள விலைவாசி கண்காணிப்புக் குழு ஆய்வு நடத்தியது. இதில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றின் விலை மிகவும் ஏறுமுகமாக இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தமிழக எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்து சங்க நிர்வாகிகளை அழைத்து தமிழக அரசு அதிகாரிகள் சில தினங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது குறித்து தலைமைச் செய லக வட்டாரங்கள் கூறியதாவது:
எண்ணெய் வியாபாரிகள் மற்றும் நிறுவன உரிமையாளர் களை அழைத்துப் பேசினோம். அவர்களிடம் பாமாயில், தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஆகியவற்றின் தொடர் விலை உயர்வு குறித்த காரணங்களைக் கேட்டறிந்தோம். அதைக் குறைக்க முடியுமா என்று கேட்டதற்கு, ‘மூலப்பொருள் விலை உயர்வு காரணமாகவே விலை அதிகரித்துள்ளது. அதைக் குறைப் பது சிரமம்’ என்றும் கூறிவிட்டனர். எண்ணெய் வியாபாரிகள் விலை உயர்த்துவதை அரசு நேரடியாக தடுத்து நிறுத்த வழிவகை எதுவும் இல்லை. எனினும், இது குறித்து உணவுத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்தாலோசித்துள்ளனர். விலைவாசி உயர்வை தடுப்பது குறித்து அக்கூட்டத்தில் விவாதித்த வற்றை அரசுக்கு தெரியப்படுத்து வோம். பிறகு, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக எண்ணெய் வியாபாரிகள் சங்க நிர்வாகி எம்.கே.கண்ணன் கூறுகையில், “பணவீக்கம் அதிகரிப்பதைத் தொடர்ந்து மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. இதைத் தொடர்ந்து, எங்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், விலைவாசிக்கான காரணம் குறித்து கேட்டனர். அதை விளக்கினோம்” என்றார்.