நெல்லை மாவட்டத்தில் இருந்து 5-வது சட்டப்பேரவை தலைவர் அப்பாவு

மு.அப்பாவு
மு.அப்பாவு
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவைக்கு அதிகளவில் பேரவைத் தலைவர்களை தந்துள்ள பெருமை திருநெல்வேலிக்கு உள்ளது. இங்கிருந்து 5-வது சட்டப்பேரவைத் தலைவராக மு.அப்பாவு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 1952-ல் சட்டப்பேரவை அமைந்ததில் இருந்து இதுவரை 19 பேரவைத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியுள்ளனர். தற்போது20-வது பேரவைத் தலைவராகஅப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தமிழக சட்டப்பேரவைக்கு சிறந்த தலைவர்களை தந்த வரலாறும், பெருமையும் திருநெல்வேலி சீமைக்கு உண்டு.

தமிழகத்தில் காங்கிரஸ்ஆட்சிக் காலத்தில் முதல்வராக காமராஜர் இருந்தபோது 1962 முதல் 1967 வரை சட்டப்பேரவைத் தலைவராக இருந்த செல்லபாண்டியன் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். அவரை நினைவுகூரும் வகையில்திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் அவரது பெயரில் மேம்பாலமும், அவரது திருவுருவச் சிலையும் அமைந்துள்ளன.

அதன் பின்பு, திமுக ஆட்சியில் முதல்வராக அண்ணாபதவி வகித்தபோது 1967 முதல் 1968 வரையில் சட்டப்பேரவைத் தலைவராக சி.பா.ஆதித்தனார் பொறுப்பு வகித்தார். திருநெல்வேலியில் இருந்து பிரிந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அவர்.

1985 முதல் 1989 வரையில் அதிமுக ஆட்சியில் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது பேரவைத் தலைவராக திருநெல்வேலியைச் சேர்ந்த பி.எச்.பாண்டியன் கோலோச்சினார். சட்டப்பேரவைத் தலைவருக்குள்ள வானளாவிய அதிகாரம் குறித்து உலகுக்கே உணர்த்தும் வகையில் அவரது செயல்பாடு அப்போது இருந்தது.

2006 முதல் 2011 வரை தமிழகத்தில் திமுக ஆட்சியில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது சட்டப்பேரவைத் தலைவராக பணியாற்றியவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இரா.ஆவுடையப்பன். இந்த வரிசையில் தற்போது திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மு.அப்பாவு தமிழக பேரவைத் தலைவராகியுள்ளார்.

ராதாபுரம் தொகுதியில் 1996 தேர்தலில் தமாகா சார்பிலும், 2001-ல் சுயேச்சையாகவும், 2006-ல்திமுக சார்பிலும் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், 2016-ல்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தற்போது வெற்றிபெற்றுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் அப்பாவுக்கு நிச்சயம் இடம் உண்டு என்று பேசப்பட்டது. தற்போது அவர்சட்டப்பேரவைத் தலைவராகியிருக்கிறார். தமிழக சட்டப்பேரவைக்கு 5-வது தலைவராக திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து அவர் சென்றுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in