Last Updated : 12 May, 2021 03:14 AM

 

Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

தேவையான ஆக்சிஜன், படுக்கை இல்லாமல் திணறும் மருத்துவமனைகள்: ஆம்புலன்ஸ்களில் பலமணி நேரம் காத்திருக்கும் கரோனா நோயாளிகள்

ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் காலியாக இல்லாததால் கரோனா நோயாளிகளுடன் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ்கள். படம்:ஜெ.மனோகரன்

கோவை

கோவையில் மருத்துவ தேவைக்கான ஆக்சிஜனுக்கு தொடர்ந்துதட்டுப்பாடு நிலவி வருவதால் ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கையில் இடம் கிடைப்பதற்காக ஆம்புலன்ஸ்களிலேயே நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோவையில் கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு கரோனா பாதிப்பின் தாக்கம் அதிகமாக உள்ளது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டிருந்தாலும், சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோரைவிட, தினசரி பாதிப்பு அதிகமாக உள்ளதால், அவை போதுமானதாக இல்லை. நீலகிரி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் சிகிச்சைக்காக கோவை வருவதால் தொடர்ந்து தேவை அதிகரித்து வருகிறது.

ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை கிடைக்க வேண்டும் என்பதற்காக கோவை அரசு மருத்துவமனையில் நேற்று காலை முதல் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் நோயாளிகள் தொடர்ந்து பல மணிநேரம் காத்திருந்தனர். அதில், சூலூர் பகுதியில் இருந்து மூச்சுத்திணறல் பிரச்சினையுடன் அழைத்துவரப்பட்ட 86 வயது முதியவருக்கு ஆக்சிஜன் படுக்கை கிடைக்காததால் ஆம்புலன்ஸிலேயே ஆக்சிஜன் அளிக்கப் பட்டுவந்தது. தொடர்ந்து மருத்துவமனையில் இடம் கிடைக்காத நிலையில் அவர் ஆம்புலன்ஸி லேயே உயிரிழந்தார்.

இ.எஸ்.ஐ மருத்துவமனையி லும் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் தொடர்ந்து நிரம்பிய நிலையிலேயே உள்ளன. இதுதொடர்பாக கோவை அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறும்போது, “ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் என மொத்தம் 717 படுக்கைகள் கோவை அரசு மருத்துவமனையில் உள்ளன.

அவை அனைத்தும் நிரம்பிய நிலையிலேயே உள்ளதால், புதிதாக வந்தவர்களை உடனடி யாக அனுமதிக்க முடியவில்லை. இருப்பினும், இதுபோன்று வருபவர்களையும் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

தற்போது கோவையில் 62 தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் காலியாக இல்லை என்று தெரிவிக்கின்றனர்.

ஒரு லட்சத்தை கடந்த பாதிப்பு

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, “கோவையில் நேற்று மட்டும் 2,650 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,722 பேர் வீடு திரும்பியுள்ளனர். 19 பேர் உயிரிழந்துள்ளனர். 12,664 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில், 4,303 பேர் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

கோவையில் இதுவரை மொத்தம் 1,00,363 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள னர். கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் எங்கு காலியிடம் உள்ளது என்பதை அறிந்துகொள்ள 0422-1077,9499933870 என்ற எண்களில் பொது மக்கள் தொடர்புகொள்ளலாம்” என்றனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் கூறும்போது, ‘‘கோவையில் மருத்துவமனை களுக்கு தேவையான ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப்போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. படுக்கை வசதியை தேவையானோ ருக்கு அளிக்கும் வகையில், கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை முறையில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. அது பலன் அளிக்கும் என நம்புகிறோம்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் கரோனா நோயாளி களை அனுமதிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x