Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

பின்னலாடை நிறுவனங்களுக்கான தளர்வுகளை ரத்து செய்து திருப்பூரில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்: கட்டுக்கடங்காத வாகன நெரிசலால் பல்வேறு தரப்பினர் அதிருப்தி

சமூக வலைதளத்தில் வெளியான மீம்ஸ்

திருப்பூர்

முழு ஊரடங்கின் 2-வது நாளான நேற்றும் திருப்பூர் மாநகரில் கட்டுக்கடங்காத வாகன போக்குவரத்து இருந்ததால், ஊரடங்கை பின்பற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக திருப்பூர் ஓடக்காடு பகுதியைச் சேர்ந்த சு.பவித்திரன் கூறும்போது, "தொழிலாளர் நகரமான திருப்பூரில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. 700-க்கும் அதிகமானோர் பாதிக்கப்படும் சூழலில், எந்தவித விழிப்புணர்வும் இல்லாமல் பொதுமக்கள் சாதாரணமாக நடமாடுவது மற்றவர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அத்தியாவசியத் தேவைஎன்பதில் இருந்து திருப்பூர் தொழில்துறையை விலக்கி, முழு ஊரடங்கைகடுமையாக்கினால் மட்டுமே அதன் நோக்கம் நிறைவேறும். இல்லையென்றால், நோய் தொற்று குறையாது.

அரசின் சட்ட, திட்டங்களைமதித்து, வீட்டை விட்டு வெளியே நடமாடாமல் இருக்கும் பலரின் வாழ்க்கையும் அடங்கியிருப்பதால், மாவட்ட நிர்வாகம் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்" என்றார்.

அனுப்பர்பாளையம் பகுதியைச் சேர்ந்த நா.தெய்வராஜ் கூறும்போது, "திருப்பூர் அணைப்புதூர் காவல் சோதனைச்சாவடி அருகே இன்று (நேற்று) பொதுமக்கள் ஊரடங்கு விதிகளை பின்பற்றாமல், கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர். அனைவருமே அத்தியாவசியத் தேவைக்கு செல்வதாக கூறுகின்றனர். இது ஊரடங்கு போன்றே தெரியவில்லை. இவர்களைப் பார்த்து மற்றவர்களும் நடமாடத் தொடங்கினால், தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும். ஊரடங்கு விஷயத்தில் மக்கள் நலன் சார்ந்து, திருப்பூரில் ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும்" என்றார்.

இதற்கிடையே, திருப்பூரில் அமல்படுத்தப்படாத முழு ஊரடங்கு நிலையை சித்தரிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வலம் வரத் தொடங்கிவிட்டன

முழு ஊரடங்கு தேவை

திருப்பூர் அனைத்து பனியன் தொழிற்சங்கள் சார்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் ஆகியோருக்கு நேற்று அனுப்பப்பட்ட கடிதத்தில் , "திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தளர்வுகளை ரத்து செய்து, முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். ஊரடங்கு காலத்திலும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தேவையான வசதிகளை செய்துதர வேண்டும். தமிழக அரசு சார்பில் நியாயவிலைக் கடைகளில் விலையில்லா உணவுப் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர். ஊரடங்கின் 2-வது நாளான நேற்று திருப்பூர் - அவிநாசி சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். (அடுத்த படம்) சமூக வலைதளத்தில் வெளியான மீம்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x