Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை இல்லை; மெத்தனப்போக்குடன் செயல்படும் அதிகாரிகள்: சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நெற்குன்றத்தைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘நெற்குன்றம் பகுதியில் ரூபஸ், ஆல்பர்ட் ஆகியோர் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் விதிகளை மீறி உரிய அனுமதியின்றி கட்டிடம் கட்டியதால், அதற்கு கடந்த 2016-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

ஆனால், இந்த தடை உத்தரவை அதிகாரிகள் முறையாக அமல்படுத்தவில்லை. எனவே, தடை உத்தரவை முறையாக அமல்படுத்த வளசரவாக்கம் மண்டல செயற்பொறியாளருக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ``குறிப்பிட்ட கட்டுமானப் பணியை நிறுத்த கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் தடை விதித்து நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடம் இடிக்கப்பட்டதா’’ என மாநகராட்சி தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மாநகராட்சி தரப்பில், தொடர்புடைய அதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டதாலும், பொறியாளர் மரணமடைந்து விட்டதாலும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. பணிமாற்றம் செய்யப்பட்ட அதிகாரி குறித்தும், இறந்த பொறியாளர் குறித்தும் அறிக்கையில் குறிப்பிடாதது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ‘‘2016- ம் ஆண்டு தடை விதித்து உத்தரவிட்டு 5 ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் செயல்பட்டுள்ளனர்’’ என கடும் கண்டனம் தெரிவித்தனர்.

‘‘நோட்டீஸ் பிறப்பித்து விட்டால் தங்களது பணி முடிந்துவிட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் கருதுகின்றனர்’’ என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

``சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அதிகாரிகள் ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும். அவ்வாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறுவதால்தான் ஏராளமான வழக்குகள் குவிந்து நீதிமன்றத்துக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது.

இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து இருந்தாலும் அதிகாரிகளின் செயல்பாடுகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தவறு செய்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் ஜூன் 7-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x