

கரோனா நோயாளிகளின் சிகிச்சையை மேம்படுத்த தற்காலிக மருத்துவர்கள், செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர் என புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:
புதுச்சேரியில் அதிகரித்து வரும் கரோனா நோயாளிகளின் சிகிச்சையை மேம்படுத்த, புதுச்சேரி அரசால் தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 85 மருத்துவர்களும், 75 செவிலியர்களும் நேற்று முதல் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
இவர்கள், கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நியமிக்கப்பட இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் கரோனா தடுப்பு பணியில், மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது, நோயாளிகளை பரிசோதித்து தனிமைப்படுத்துவது, கரோனா நோய் உள்ளவர்களுக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்வது போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப்படுவர்.
மேலும் காரைக்கால் பகுதிக்கு என்று 45 மருத்துவர்களுக்கான நேர்காணல் முடிக்கப்பட்டுள்ளது. மாஹேவுக்கு என்று 5 மருத்துவர்களும், ஏனாமிற்கு 16 மருத்துவர்களுக்குமான நேர்காணலும் நடைபெற்றுள்ளது.
காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய மூன்று பகுதிகளுக்கு 294 பாராமெடிக்கல் பணியாளர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர். இவர்களில் லேப் டெக்னீசியன், எக்ஸ்-ரே டெக்னீசியன், சானிட்டரி ஒர்க்கர், வார்டு அட்டெண்டர் போன்றோர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேலும், கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு உதவ சுகாதாரத்துறை மூலமாக தகவல் பெற 104 என்ற தொடர்பு எண் மற்றும் ‘Covid19dashboard.py.gov.in’ என்ற டேஸ்போர்ட் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் உள்ள காலி படுக்கை எண் வசதிகளை தெரிந்து கொண்டு மேற்கொண்டு சிகிச்சைக்காக அங்கு செல்லலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.