Published : 12 May 2021 03:15 AM
Last Updated : 12 May 2021 03:15 AM

தேனி அரண்மனைப்புதூர் ஆசிரம வளாகத்தில் ஓம்காரநந்த சுவாமி உடல் அடக்கம்

ஓம்காரநந்த சுவாமி

தேனி

முக்தி அடைந்த தேனி வேதபுரி சித்பவானந்த ஆஸ்ரம பீடாதிபதி பூஜ்ய ஓம்காரநந்த சுவாமியின் உடல் ஆசிரம வளாகத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம், அரண்மனைப்புதூர் அருகே சத்திரப்பட்டி சாலையில் வேதபுரி ஸ்வாமி சித்பவானந்த ஆசிரமம் உள்ளது. இதன் பீடாதிபதியாக இருந்தவர் பூஜ்ய ஓம்காரநந்த சுவாமி (65). இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த 3-ம் தேதி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. மருத்துவக் குழுவினரின் தொடர் சிகிச்சையில் தொற்று குறைந்தது. நேற்று முன்தினம் பிற்பகலில் இதயக் கோளாறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது ஆனால், அதற்குள் அவரது உடல்நிலை மோசமடைந்து. மாலையில் முக்தி அடைந்தார். அவரது உடல் வேதபுரி ஆசிரமத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இவரது உடலுக்கு புதுக்கோட்டை புவனேஸ்வரி, தேனி குருதட்சிணாமூர்த்தி கோயில்களைச் சேர்ந்த வேத விற்பன்னர்கள், சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க வழிபாடு செய்தனர்.

பின்பு ஆசிரமத்தில் இருந்து சப்பரத்தில் எடுத்து வரப்பட்ட சுவாமியின் உடல் குரு தட்சிணாமூர்த்தி கோயில் எதிரே கொண்டு வரப்பட்டது. அங்கு விபூதி, சந்தனம், குங்குமம், உப்பு, சூடம், பன்னீர், இளநீர், பூக்கள் உள்ளிட்ட பொருட்களால் வழிபாடு செய்யப்பட்டது. 8 அடி ஆழம், 4 அடி அகல குழியில் கிரேன் மூலம் சுவாமியின் உடல் இறக்கப்பட்டு நின்ற நிலையில் சமாதி செய்யப்பட்டது. இதில் பல்வேறு நகரங்களில் இருந்து சந்நியாசிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x