

கன்னியாகுமரி மாவட்டம் உன்னங்குளம் கிராமத்தில் பாசனக் கால்வாய் அடைக்கப்பட்டதால் 250 ஏக்கரில் விவசாயப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 2 ஆண்டுகளாக விவசாயிகள் கடும் இழப்பை எதிர்கொள்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீராதார கட்டுப்பாட்டில் உள்ள 2,040 குளங்கள், 700 கிலோ மீட்டர் தூரம் வரையிலான பிரதான பாசனக் கால்வாய்கள், 2,000 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள கிளைக் கால்வாய்கள் மூலம் விவசாயத்துக்கு நீர் விநியோகம் செய்யப்படுகிறது. விவசாயப் பரப்பு குறையாமல் இருக்கும் வகையில் பாசனக் கால்வாய்களை பாதுகாத்து சீரமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் பொதுப்பணித்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் வெள்ளிச் சந்தையை அடுத்துள்ள உன்னங்குளம் கிராமத்தில் பாசனக் கால்வாய் அடைக்கப்பட்டதால் 250 ஏக்கரில் வேளாண் பயிர்கள் கருகி வருகின்றன. உன்னங்குளம் ஆற்றுக் கால்வாயிலிருந்து இருந்துகிளைக் கால்வாய் மூலம் அப்பகுதியில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன நீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. 800 ஆண்டுகளுக்கு மேல் பல தலைமுறைகளாக இப்பாசன முறை இருந்து வந்தது.
உன்னங்குளம் பத்ரகாளியம்மன் கோயில் வளாகத்தின் மேற்குப் பகுதியில் செல்லும் கிளைக் கால்வாய் மூலம் 250-க்கும் மேற்பட்டஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த தென்னை, வாழை, மரவள்ளிக் கிழங்கு மற்றும் பிற வேளாண் பயிர்கள் பயன்பெற்று வந்தன.
இரு ஆண்டுகளுக்கு முன்பு இக்கால்வாய் அடைக்கப்பட்டது. இதனால் பாசன நீர் கிடைக்காமல் அப்பகுதி விவசாயிகள் பெரும்இழப்பை சந்தித்தனர். மின்மோட்டார் மூலம் நீர் விநியோகம் செய்யும் வசதியுள்ள நிலங்களைத் தவிர பிற விவசாய நிலங்களில் உள்ள பயிர்கள் கருகின.
இதுகுறித்து பாசனத்துறையினரிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்திருந்தனர். கால்வாயை திறந்து பாசன நீர் விநியோகிக்க ஏற்பாடு நடந்து வந்த நிலையில், தற்போது கால்வாயின் ஓரம் நிலம் வைத்துள்ளவர்கள் அடைக்கப்பட்ட கால்வாயின் மேல் கருங்கற்களால் கட்டுமானம் அமைத்து பாதையாக மாற்றி வருகின்றனர். இதற்கு உன்னங்குளம் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாசனக் கால்வாயை சீரமைத்து மீண்டும் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பாசனத்துறை குமரி மாவட்ட தலைவர் வின்ஸ் ஆன்றோ கூறும்போது, ‘‘தற்போது பல இடங்களில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களாலும், பலரது சுயநலத்தாலும் வேளாண் நிலங்களின் அருகாமையில் ஓடும் கால்வாய்களை நிரப்பி அடைப்பது பரவலாக நடந்து வருகிறது. இவ்வாறு அழிக்கப்படும் கால்வாய்களை மீட்பதற்காவே பாசனக் கால்வாய் மீட்பு இயக்கத்தினர் செயல்பட்டு வருகிறோம்.
உன்னங்குளம் கிராமத்தில் பாசனக் கால்வாய் அடைக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. சிலரதுசுயநலத்துக்காக அடைக்கப்பட்ட பாசனக் கால்வாயை திறந்துமீண்டும் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்க அனுமதிக்க வேண்டும். இதற்கு பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரு வாரத்துக்குள் கால்வாயில் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்காவிட்டால் உன்னங்குளம் சந்திப்பில்வேளாண் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றார்.