Published : 17 Dec 2015 02:58 PM
Last Updated : 17 Dec 2015 02:58 PM

சென்னை மழைக்கு திருக்குறளில் தீர்வு: நாடாளுமன்ற வளாகத்தில் வைரமுத்து பேச்சு

“கெடுப்பதும் மழைதான்; கெட்டவர்களை மீண்டும் வாழவைப்பதும் மழைதான்” என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். சென்னை மழைக்கு திருக்குறள் தீர்வு சொல்கிறது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) திருக்குறள் திருவிழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், 133 மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற பின் விழாவில் வைரமுத்து பேசியதாவது:

''இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் திருக்குறள் ஒலிப்பதைத் தமிழுக்குக் கிடைத்த தேசியப் பெருமை என்று கருதுகிறேன். திருக்குறளின் மொத்த அதிகாரங்களையும் மூளைக்குள் எழுதிக்கொண்ட 133 கண்மணிகள் இந்த நாடாளுமன்றத்துக்குள் வந்திருக்கிறார்கள்.

இந்த மாபெரும் பணியைச் செய்த மக்களவை உறுப்பினர் தருண் விஜய்க்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். அதிகாரம் உள்ளவர்கள்தாம் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியும். இந்தக் குழந்தைகளும் அதிகாரத்தோடுதான் நாடாளுமன்றத்துக்குள் வந்திருக்கிறார்கள், திருக்குறளின் 133 அதிகாரங்களோடு.

மனிதர்களின் அடையாளம் முகம். மாநிலங்களின் அடையாளம் மொழி. மொழியின் அடையாளம் இலக்கியம். தமிழ் மொழிக்கான இலக்கிய அடையாளமாக, ஞானக் கருவூலமாகத் திகழ்கிறது திருக்குறள். அது தமிழ்மொழியில்தான் எழுதப்பட்டது என்றபோதிலும் ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிமையானது; ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் பொதுவானது.

பகவத்கீதை - கடவுள் மனிதனுக்குச் சொன்னது. திருவாசகம் - கடவுளுக்கு மனிதன் சொன்னது. திருக்குறள் - மனிதன் மனிதனுக்குச் சொன்னது.

தனக்குப் பொருத்தமில்லாத எதையும் வரலாற்றின் நீரோட்டம் கரையில் வீசியெறிந்திவிட்டுப் போய்விடும். ஆனால் திருக்குறளைக் காலம் அப்படி ஒதுக்க முடியவில்லை. ஏனென்றால், திருக்குறள் இந்த பூமியில் வாழப்போகும் கடைசி மனிதன் வரை சிந்திக்கிறது. அதனால்தான் இந்தத் தொழில்நுட்ப யுகத்துக்கும் அது பெரும்பாலும் பொருத்தமாக இருக்கிறது.

திருக்குறள் மனிதனைப் பேசுகிறது. ஆனால் அது தமிழன் - வங்காளி - மலையாளி - மராட்டியன் - தெலுங்கன் என்று இனம் பிரித்துப் பேசவில்லை. சொல்லப்போனால் தமிழ் என்ற சொல்லே திருக்குறளில் இல்லை. திருக்குறள் நிலம் பேசுகிறது. ஆனால் அது இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் என்று நாடு பிரிக்கவில்லை. எல்லா நிலத்திற்கும் எல்லா இனத்துக்கும் காற்றைப்போல் சூரியனைப்போல் பொதுவாகவே திருக்குறள் படைக்கப்பட்டிருக்கிறது.

இன்று இந்த உலகத்தின் தலைக்குமேல் ஆடிக்கொண்டிருக்கிற வன்முறை என்ற கத்திக்கு எதிராக மனித மனங்களைச் சலவை செய்கிறது திருக்குறள். மனித குலத்தின் பெருஞ்செய்தியாக அது அன்பையே ஓதுகிறது. திருக்குறள்தான் டால்ஸ்டாய் என்ற ரஷ்யப் படைப்பாளிக்கு அகிம்சையைக் கற்றுத் தந்திருக்கிறது. “அகிம்சை என்ற தத்துவத்தை ஜெர்மனியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளில் இருந்துதான் நான் பெற்றுக்கொண்டேன்” (I have taken the concept of non-violence from a German Translation of Thirukkural) இது லியோ டால்ஸ்டாயின் ஒப்புதல் வாக்குமூலம்.

புவி வெப்பமாதல்தான் அகில உலகமும் எதிர்கொள்ளவேண்டிய உடனடிப் பெரும் பிரச்சனை. இன்னும் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமானால் 33 விழுக்காடு விலங்கினங்கள் பூமியிலிருந்தே காணாமல் போய்விடும். இப்போது பாரீஸில் நிகழ்ந்த பருவநிலைமாற்ற உச்சி மாநாட்டில் எட்டப்பட்டிருக்கிற முடிவுதான் மனிதகுலத்தின் நிகழ்கால நிமிடத் தேவை.

“தாமதப்படுத்த வேண்டியவற்றைத் தாமதப்படுத்து; தாமதிக்கக் கூடாதவற்றைத் தாமதப்படுத்தாதே”

இதைத்தான் -

“தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க

தூங்காது செய்யும் வினை” என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிர்வாக மேலாண்மைத் தத்துவமாக வள்ளுவம் உலகுக்கு வழங்கியது.

இந்த மாத மழையில் எங்கள் சென்னை மூழ்கிவிட்டது. மழைத் தண்ணீர் மனிதர்களைக் குடித்துவிட்டுப் போய்விட்டது. எங்கள் வானம் பகலைத் தொலைத்துவிட்டது. இது ஒரு நூற்றாண்டின் பேரழிவு. இந்தத் துயரம் பற்றியும் அதிலிருந்து மீள்வது பற்றியும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட குறள் எங்களுக்கு வழிகாட்டுகிறது.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்பாய் மற்றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை” என்பது குறள்.

“கெடுப்பதும் மழைதான்; கெட்டவர்களை மீண்டும் வாழவைப்பதும் மழைதான்” என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். எங்களை அழித்த மழையின் மிச்சம் எங்கள் பூமிக்கடியில் சேமிப்பாகக் கிடக்கிறது. தமிழ்நாட்டு விவசாயிகள் அந்த நீரைப் பயன்படுத்தி மூன்று மடங்கு மகசூல் காண்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இழப்பை அப்படித்தான் நாங்கள் ஈடு செய்யப்போகிறோம். இந்த மழைச் சேதத்தை ஈடு செய்வதற்கு மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்குக் கைகொடுக்க வேண்டும். உழைப்பதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள்; பிழைப்பதற்கு நாம்தான் வழிசெய்ய வேண்டும்.

ஆதாரங்களை அழித்த அதே மழை நீரைப் பயன்படுத்தி அவர்கள் ஆதாயங்களை ஈட்டுவார்கள். வள்ளுவர் எங்களுக்கு வழங்கிய வாழ்க்கைப்பாடம் இதுதான். இப்படி வாழ்வுக்கு வழிகாட்டுவதால்தான் திருக்குறள் இன்னும் உயிர்ப்போடு விளங்குகிறது.

நாடாளுமன்ற வளாகத்துக்குள் திருவள்ளுவர் கொண்டாடப்படுவதில் இமயம் குமரிக்கு வந்து குடைபிடிப்பதாய் மகிழ்கிறோம்.

இந்தியாவின் எல்லா தேசிய இனங்களிலும் உள்ள ஞானச் செல்வங்கள் இப்படி அடையாளம் காணப்பட வேண்டும்; ஆராதிக்கப்பட வேண்டும்'' என்று வைரமுத்து பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x