

மலேசியாவில் இருந்து வந்த வெள்ள நிவாரண பொருட்கள் திருச்சி விமான நிலையத்தில் தேங்கிக் கிடக்கிறது என்று மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு, நிர்க்கதியாக நிற்கும் மக்களுக்கு உதவி செய்திட, மலேசியாவில் இயங்கி வரும் மக்கள் அறக்கட்டளை அமைப்பைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள 6 மாநில மக்களிடம் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 20 டன் நிவாரணப் பொருட்களை சேகரித்துள்ளனர். அதில், முதல்கட்டமாக ஒன்றரை டன் நிவாரணப் பொருட்களை விமானம் மூலம் தமிழகத்துக்கு அனுப்பினர்.
மலிண்டோ ஏர்லைன்ஸ் நிறுவனம் கட்டணம் வசூலிக்காமல் இப்பொருட்களை திருச்சி கொண்டு வந்தது. “யூ திங்க்” என்ற தொண்டு நிறுவனம் இப்பொருட்களைப் பெற்று மக்களுக்கு விநியோகிக்க திட்டமிட்டபோது, திருச்சி விமான நிலைய சுங்கத் துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். அதனால், தொண்டு நிறுவனத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி கேட்டனர். சுங்கத் துறைக்குத் தேவையான ஆவணங்களை ஏற்பாடு செய்யாமல், மாவட்ட நிர்வாகம் அலைக்கழித்துள்ளது. இதனால், வெள்ள நிவாரணப் பொருட்கள் திருச்சி விமான நிலையத்திலேயே தேங்கிக் கிடக்கின்றன.
தமிழக அரசு நிர்வாகம் செயலற்று கிடக்கிறது என்று மக்கள் நலக் கூட்டணி சார்பில் குற்றச்சாட்டு எழுப்பியதுடன், முதல்வர் ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தோம். இக்குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில் அரசு நடவடிக்கை தொடர்வது கண்டிக்கத்தக்கது. திருச்சி விமான நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் நிவாரணப் பொருட்களை உடனடியாக விநியோகிக்க அரசு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்'' என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.