Last Updated : 11 May, 2021 07:18 PM

 

Published : 11 May 2021 07:18 PM
Last Updated : 11 May 2021 07:18 PM

திருப்பத்தூர் மாவட்டத்தில் கூடுதலாக கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்க ஏற்பாடு: சுகாதாரத்துறை தகவல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், சிறப்பு சிகிச்சை மையங்களை அதிகரிக்க 4 தாலுகாக்களில் இடம் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா 2-வது அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றின் பாதிப்பு 12 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 1,500-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகள், சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாளுக்கு நாள் நோய்ப் பரவல் அதிகரித்து வருவதால் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் போதிய இடம் இல்லை. புதிய தொற்று ஏற்பட்டு வரும் நோயாளிகள் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது. திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டு முழுமையாக நிரம்பிவிட்டதால் புதிய நோய்த் தொற்றுடன் வருவோர் சிறப்பு சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் 4 தாலுகாக்களிலும் கூடுதல் சிறப்பு சிகிச்சை மையங்களை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து அதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள், அங்கு நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, திருப்பத்தூர் மாவட்டத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டு வரும் சிறப்பு சிகிச்சை மையங்களை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் இன்று ஆய்வு செய்தார். அப்போது, புதிதாகத் தொடங்க உள்ள சிறப்பு சிகிச்சை மையங்களில் நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை விரைவாக செய்து முடித்து விரைவாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என அந்தந்த வட்டாட்சியர்களுக்கு ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டார்.

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறையினர் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தவிர ஆம்பூர் வட்டத்தில் மாதனூர், சோலூர், உமராபாத் ஆகிய பகுதிகளிலும், வாணியம்பாடியில் இஸ்லாமியா கல்லூரியிலும், நாட்றாம்பள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், திருப்பத்தூரில் 2 தனியார் பள்ளிகள், நாட்றாம்பள்ளியில் அரசுப் பள்ளி, வாணியம்பாடியில் தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு அங்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தற்போது கூடுதல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, திருப்பத்தூர் அடுத்த திம்மணபுதூர் ஊராட்சியில் உள்ள சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் 50 படுக்கை வசதியுடன் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது.

அதேபோல, வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பேரூராட்சியில் உள்ள ஜேவிஎம்எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 300 படுக்கை வசதிகளுடன் கரோனா சிறப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் ஜெனதாபுரம் எஸ்எப்எஸ் மெட்ரிக் பள்ளியில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்தா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஆம்பூர் வர்த்தக மையத்தில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 16 இடங்களில் 2,300 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிறப்பு சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளது. இது தவிர மேலும் சில இடங்களில் சிகிச்சை மையம் அமைக்கவும் இடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x