

இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்யக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
இந்தியாவில் கரோனா 2ம் அலை வேகமாகப் பரவி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதால் மருந்துத் தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் மற்றும் மருந்து தட்டுப்பாடு காரணமாக கரோனா தொற்றாளர்கள் உயிரிழந்து வருகின்றனர்.
ஆக்சிஜன் கம்பெனிகள் பல தனியார் வசம் இருப்பதால் அவர்கள் விலை அதிகமாக விற்கின்றனர். இதனால் ஏழை எளிய மக்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவில் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்து இந்தியாவிலுள்ள தனியார் மற்றும் அரசு சார்ந்த அனைத்து ஆக்ஸிஜன் கம்பெனிகள் மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் மருத்துவமனைகள் ஆகிய அனைத்தையும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மக்களை கரோனா பாதிப்பிலிருந்து காப்பாற்ற முடியும்.
எனவே இந்தியாவில் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு விடுமுறை கால நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.