

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், நளினி ஆகிய 7 பேரும், 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
எழுவர் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 2018, செப். 9 அன்று, ஏழு பேரையும் விடுதலை செய்வதென அப்போதைய முதல்வர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பப்பட்டும் இதுவரை உரிய முடிவெடுக்கவில்லை. இதுகுறித்து, உரிய முடிவெடுக்க வேண்டும் என, அப்போதையை எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு வலியுறுத்தி வந்தன.
திமுக அரசு அமைந்துள்ள நிலையில், எழுவர் விடுதலையை மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளன. ஏழு பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், இன்று (மே 11) சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோருடன் முதல்வர் ஸ்டாலின், எழுவர் விடுதலை குறித்து ஆலோசித்தார். எழுவர் விடுதலை விவகாரத்தில் உள்ள சிக்கல்கள், ஆளுநர் தாமதம் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.