Last Updated : 11 May, 2021 04:20 PM

 

Published : 11 May 2021 04:20 PM
Last Updated : 11 May 2021 04:20 PM

உயர் நீதிமன்ற உத்தரவால் மதுரையில் 50 ஆதரவற்றவர்கள் மீட்பு

மதுரை

உயர் நீதிமன்றம் உத்தரவை அடுத்து மதுரையில் சுற்றித்திரிந்த 50-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர்கள் மீட்கப்பட்டனர்.

மதுரையில் ஆதரவற்ற நிலையில் மனநலன் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் பல்வேறு இடங்களில் சுற்றி திரிகின்றனர். இவர்களுக்கு தன்னார்வலர்கள் உணவு மற்றும் குடிநீர் வழங்கி வருகின்றனர்.

தற்போது கரோனா 2வது அலை பரவி வரும் சூழலில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஆதரவற்றோர் உணவு, குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். பல இடங்களுக்கு அலைந்து திரிவதால் இவர்களுக்கும், இவர்களால் மற்றவர்களுக்கும் கரோனா பரவும் வாய்ப்பும் உள்ளது.

இதையடுத்து மதுரையில் சுற்றி திரியும் ஆதரவற்றோரை மீட்கவும், அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கக்கோரி மதுரை அண்ணா நகர் வழக்கறிஞர் முத்துகுமார், உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த கோடை விடுமுறை கால அமர்வு, மதுரையில் ஆதரவற்றோரை மீட்கக்கோரி மனுதாரர் அனுப்பிய மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இதையடுத்து மதுரை வீதிகளில் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு மதுரை மாநகராட்சி இளங்கோ மேல் நிலை பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

இது குறித்து மக்கள் சிலர் கூறுகையில், ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்வதாக சில அறக்கட்டளைகள், ஆதரவற்றவர்களை மீட்டு சில நாட்கள் தங்க இடம் கொடுத்து பின்னர் வெளியே அனுப்பிவிடுகின்றனர். இதனால் நாளுக்கு நாள் ஆதரவற்றோர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எனவே அரசே ஆதரவற்றோர்களை மீட்டு முதியோர் பாதுகாப்பு மற்றும் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு சட்டப்படி தங்குமிடம், உணவு, உடை, குடிநீர், மருத்துவ வசதிகளை செய்ய வேண்டும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x