Last Updated : 11 May, 2021 03:46 PM

 

Published : 11 May 2021 03:46 PM
Last Updated : 11 May 2021 03:46 PM

மாநில அரசு பரிந்துரைப்பவர்களையே நியமன எம்எல்ஏவாக நியமிக்க வேண்டும்; புதுச்சேரி திமுக வலியுறுத்தல்

மாநில அரசு பரிந்துரைப்பவர்களையே நியமன எம்எல்ஏக்களாக நியமிக்க வேண்டுமெனப் புதுச்சேரி திமுக சட்டப்பேரவை குழுத் தலைவர் சிவா எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (மே.11) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘‘புதுச்சேரியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவையும், அரசும் இருந்தாலும் மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக தொடர்ந்து ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொள்வதற்கு முன்பாகவே நியமன எம்எல்ஏக்களை நியமித்து, மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை அவமதித்துள்ளது.

நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் சரியான வாதங்கள் முன் வைக்கப்படவில்லை. அதாவது நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்குரிமை அளித்தால், அவர்களைக் கொண்டு மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியைக் கலைத்துவிட முடியும் அல்லது மக்களால் தேர்வு செய்யப்படாத அரசு ஆட்சி அமைக்க முடியும் போன்றவை விவாதத்தில் முன்வைக்கப்படவில்லை.

இதனால் உச்ச நீதிமன்றமும் இந்த வழக்கில் சரியான தீர்ப்பை வழங்கவில்லை. இதனால் நியமன எம்எல்ஏக்கள் நியமனம் தொடர்பாகத் தற்போது மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடைமுறை ஜனநாயகம் அழிய வழிவகுக்கும். எனவே தற்போதுள்ள நியமன எம்எல்ஏக்கள் முறையைக் கைவிட்டு புதுச்சேரியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு பரிந்துரைக்கும் நபர்களையே நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கும் முறையைக் கொண்டுவர வேண்டும்.

துணைநிலை ஆளுநர் மூலம் புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் தலையிட்டு, பல்வேறு பணிகளைச் செய்து வரும் மத்திய அரசு, புதுச்சேரி மக்களின் நலனிற்காக எந்தப் பணியும் மேற்கொள்வதில்லை. அந்த வகையில் கரோனா ஊரடங்கு காலத்திலும் மக்களின் பொருளாதார நிலையைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் மின் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி மக்களால் தேர்வு செய்யப்படாதவர்களும், தேர்வு செய்யத் தகுதியில்லாதவர்களும் அரசு நிர்வாகத்தைக் கையில் எடுத்துக் கொண்டால் இந்த நிலைதான் ஏற்படும். உடனடியாகத் தற்போது உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைத் திரும்பப் பெறுவதுடன், ஏற்கனவே நடைமுறையில் உள்ள மின் கட்டணத்தில் இருந்தும் தலா ஒரு யூனிட்டிற்கு ரூ.50 காசு குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கில் அம்மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.4 ஆயிரம் நிவாரணம் அறிவித்து, வழங்கும் பணியையும் தொடங்கி வைத்து ஊரடங்கைப் பிறப்பித்துள்ளார். ஆனால் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு வரும் துணைநிலை ஆளுநர் மக்களுக்கு கரோனா நிவாரணம் கிடைக்க எந்த வழியும் செய்யவில்லை. மத்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள் கடிதத்தைக்கூட எழுத முன்வரவில்லை. எனவே புதுச்சேரி அரசு உடனடியாக மக்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும்.

முதல்வர் ரங்கசாமி முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் ஆகியோரின் நிலையை கருத்தில் கொண்டு மாதாந்திர உதவித் தொகையில் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். எனவே தற்போது உயர்த்தப்பட்ட ரூ.500 முதியோர் உதவித் தொகை தொடர்ந்து கிடைக்கச் செய்ய முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’

இவ்வாறு சிவா எம்எல்ஏ கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x