அரசு மருத்துவமனை வளாகத்தில் இலவச உணவுத் திட்டம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

அரசு மருத்துவமனை வளாகத்தில் இலவச உணவுத் திட்டம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் ஊரடங்கு முடியும் வரையில் 24 மணி நேரமும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முழு ஊரடங்கு காலத்தில் கரோனா தொற்று காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தொற்றாளர்களுக்கும், அவர்களுக்கு உதவியாக இருப்பவர்களுக்கும் பிற நோய்களால் அங்கே அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கும், அவர்களைக் காண வருபவர்களுக்கும் 24 மணி நேரமும் உணவு வழங்க வேண்டும் என்று திட்டமிட்டோம்.

இதற்காக 94 மாதங்களாக மாதந்தோறும் ஒரு நாள் இலவச உணவு வழங்கி வரும் 'சங்கமித்ரா' என்னும் தனியார் அமைப்பினைத் தொடர்புகொண்டு பேசினோம். ஊரடங்கில் 24 மணி நேரமும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இலவச உணவு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.

எங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தனியார் அமைப்பு, இலவச உணவை வழங்க முன்வந்தது. அதன்படி, 24 மணி நேரமும் இலவச உணவு வழங்கும் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவமனையின் இயக்குனர் இருவரும் இணைந்து இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துள்ளனர்.

ஆட்சி அதிகாரத்தில் இருந்து மக்களுக்கு உதவி செய்வதோடு கட்சி சார்பாகவும் மக்களுக்கு உதவ தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் முதல் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துள்ளோம்" என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in