

தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு மற்றும் துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி ஆகியோர் போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர். இவர்கள் இருவரும் நாளை பதவியேற்கவுள்ளனர்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து, 16-வது சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கீழ்பென்னாத்தூர் திமுக எம்எல்ஏ கு.பிச்சாண்டி நியமிக்கப்பட்டார்.
சட்டப்பேரவையின் சபாநாயகராக யார் இருப்பார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. சபாநாயகர், துணை சபாநாயகருக்கான தேர்தல் நாளை (மே 12) நடைபெற உள்ளது. இந்நிலையில், சபாநாயகருக்கான தேர்தலில் ராதாபுரம் எம்எல்ஏ மு.அப்பாவு, துணை சபாநாயகருக்கான தேர்தலில் எம்எல்ஏ கு.பிச்சாண்டி ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடுவர் என, திமுக தலைமைக் கழகம் நேற்று அறிவித்தது.
இந்நிலையில், இன்று (மே 11) சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், பகல் 12 மணிக்குள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 12 மணி வரை சபாநாயகர் பதவிக்கு அப்பாவு மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கு கு.பிச்சாண்டியும் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். எனவே, போட்டியின்றித் தேர்வாகியுள்ள இருவரும், நாளை (மே 12) பதவியேற்கின்றனர்.
சபாநாயகர் அப்பாவு
சட்டப்பேரவை நிகவுகளில் நீண்ட அனுபவம் கொண்ட மு.அப்பாவு, காங்கிரஸ் கட்சியில் தன் அரசியல் பணியைத் தொடங்கினார். மூப்பனார், தமிழ் மாநில காங்கிரஸைத் தொடங்கியபோது, அதில் தன்னை இணைத்துகொண்டு, 1996-ல் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2001-ல் சுயேச்சையாக அத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறும் அளவுக்கு தொகுதி மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றவர்.
பின்னர், திமுகவில் இணைந்த அப்பாவு, 2006-ல் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011-ல் அத்தொகுதி, கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதால் அவர் போட்டியிடவில்லை.
2016-ல் அதிமுக வேட்பாளர் இன்பதுரையிடம் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தபால் வாக்குகள் எண்ணுவதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி உச்ச நீதிமன்றம் வரை சென்றார். ஆனால், நீதிமன்றத்தில் தீர்ப்பு வேறாக அமைந்தது.
இந்நிலையில், இந்தத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் இன்பதுரையைவிட 4,492 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்து, சபாநாயகராகவும் தேர்வாகியுள்ளார்.
இது தொடர்பாக, அப்பாவு தன் ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு 16-வது சட்டப்பேரவையின் சபாநாயகராக என்னைத் தேர்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
துணை சபாநாயகர் பிச்சாண்டி
இவர், 1996 முதல் 2001 வரை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். இந்தத் தேர்தலில் கீழ்பென்னாத்தூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் துணை சபாநாயகராக போட்டியின்றித் தேர்வாகியுள்ளார்.