

தமிழக அரசு சார்பில் 43 யானை களுக்கு மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றுப்படுகையில் 48 நாட்களுக்கு சிறப்பு நலவாழ்வு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள கோயில் யானைகள் மற்றும் தனியார் யானை களுக்கு போதிய ஓய்வும், சத்தான உணவும், மருத்துவ சிகிச்சையும் அளிக்கும் வகையில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் திட்டம் கடந்த 2003-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்துசமய அறநிலையத்துறையும், தமிழக வனத்துறையும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், 2015-2016-ம் ஆண்டில் கோயில்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான 41 யானைகள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 2 யானைகள் ஆக மொத்தம் 43 யானைகளுக்கு ஜனவரி 7 முதல் பிப்ரவரி 23-ம் தேதி வரை 48 நாட்களுக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், தேக்கம் பட்டி, வனபத்ரகாளியம்மன் கோயிலை ஒட்டிய பவானி ஆற்றுப் படுகையில் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்த முதல்வர் ஜெய லலிதா ஆணையிட்டுள்ளார்.
இந்த சிறப்பு முகாமில் கலந்து கொள்ளும் யானைகளுக்கான மொத்த செலவுத் தொகை ஒரு கோடியே 4 லட்சத்து 72 ஆயிரத்தை தமிழக அரசே ஏற்கும். முகாமுக்கு வர மறுக்கும் யானைகளை வற்புறுத்தி முகாமுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும், நோயுற்று இருக்கும் யானைகளை முகாமுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தற்போது இருக்கும் இடத்திலேயே இந்த யானைகளுக்கும் முகாமில் வழங்கப்படுவது போன்ற உணவு, மருத்துவ வசதி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் ஆணை யிட்டுள்ளார்.
யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமுக்குத் தேவையான அனைத்து ஆயத்தப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. தகுதியுள்ள யானைகளை தேர்வு செய்து ஜனவரி 7 முதல் பிப்ரவரி 23 வரை வன பத்ரகாளியம்மன் கோயிலை ஒட்டிய பவானி ஆற்றுப்படுகையில் முகாம் நடத்தப்படும்.
முகாமுக்கு வர மறுக்கும் யானைகள், நோயுற்று இருக்கும் யானைகள் ஆகியவற்றுக்கு தற்போது அவை இருக்கும் இருப்பிடத்திலேயே முகாமில் வழங்கப்படுவது போன்ற உணவு, மருத்துவ வசதி வழங்கப்படும். மேலும், யானைகளை நல்ல முறையில் பராமரிக்க ஏதுவாக யானை பராமரிப்பு குறித்து நன்கு அறிந்த வல்லுநர்களைக் கொண்டு யானைப் பாகன்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.