

தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டத்தில், தவறு செய்யும் அமைச்சர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும், காவல்துறையினர் நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் புதிய முதல்வராக மே 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்நிலையில், தமிழக அமைச்சரவைக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. கரோனா பரவல்கட்டுப்பாடு குறித்து நடைபெற்ற இக்கூட்டத்தில், அமைச்சர்களுக்கு சில அறிவுறுத்தல்களையும் முதல்வர் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, அமைச்சர்கள் தங்கள் உதவியாளர்கள் நியமனத்தில் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள்குறித்த தகவல்களை முழுமையாக அறிந்த பின் நியமிக்க வேண்டும்.தேவையில்லாத சர்ச்சைகளைதவிர்க்க வேண்டும். காவல்துறையினர் செயல்பாடுகளில் எக்காரணம் கொண்டும் தலையிடக் கூடாது. காவல்நிலையங்களுக்கு நேரில் செல்வதையோ போனில் பேசுவதையோ தவிர்க்க வேண்டும். காவல்துறையினர் தவறு செய்தால் என்னிடம் தெரிவிக்க வேண்டும்.
துறைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் அத்துறையில் உள்ள அனைத்து விவரங்களையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.அதிகாரிகள் நியமனங்கள், பணிமாறுதல்களில் வெளிப்படைத்தன்மை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தவறு செய்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன். பதவி நீக்கம் செய்யவும் தயங்க மாட்டேன் என்று அவர் தெரிவித்ததாக தகவல் கசிந்துள்ளது.